Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாக்கடைக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது

Print PDF

தினமணி          14.12.2010

சாக்கடைக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது

சேலம், டிச. 13: புதை சாக்கடை, செப்டிக் டேங்க் குழிகளில் தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்வதை அரசு, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் புதை சாக்கடை, செப்டிக் டேங்க், தொழிற்சாலை கழிவுக் குழிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறங்கி, கைகளால் அவற்றை அகற்றி வந்தனர். இதனால் விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் பலர் இறந்தனர். எனவே, மனிதர்களின் கழிவுகளை மனிதர்களே அகற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த மாதம் அரசு புதிய உத்தரவில், அனைத்து அரசுத்துறைகள், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் இதுபோன்ற கழிவுகளை அகற்றுவதற்கு தொழிலாளர்களை பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் தனியார் வாகன உரிமையாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாநகராட்சியில் சுமார் 500 துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 700 பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் கழிவுகளை அகற்றுவதற்கு எந்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எனவே, நீதிமன்ற உத்தரவு, அரசு ஆணையை மதித்து அனைவரும் செயல்பட வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.