Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மக்கள் குறைகளை தீர்க்க பேஸ்புக்கில் நுழைகிறது டெல்லி மாநகராட்சி

Print PDF

தினகரன்         16.12.2010

மக்கள் குறைகளை தீர்க்க பேஸ்புக்கில் நுழைகிறது டெல்லி மாநகராட்சி
புதுடெல்லி, டிச.16:

குப்பை அள்ளுதல், கழிவு நீர் போன்ற சுகாதார பிரச்னைகள் குறித்து டெல்லி மாநகராட்சிக்கு இனி பேஸ்புக் மூலம் புகார் செய்யலாம். ஜனவரி மாதம் டெல்லி மாநகராட்சிக்கென்று தனியாக ஒரு பேஸ்புக் குரூப் கணக்கு தொடங்கப்படுகிறது.

குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் கழிவுநீர் அடைப்பு போன்ற சுகாதார பிரச்னைகள் குறித்தும் மாநகராட்சியின் பேஸ்புக்கில் மக்கள் புகார் செய்யலாம். படங்களையும் இணைத்து அனுப்பலாம். இதை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஏற்பாட்டை மாநகராட்சி செய்துள்ளது. டெல்லி மாநகராட்சிக்குட்பட்டு 2500 குப்பை கூடங்கள் (தாலோஸ்) உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குப்பை கூடங்களின் பட்டியல் பேஸ்புக்கில் இடம்பெற்றிருக்கும். பட்டியலில் காணப்படும் தங்களுக்குரிய பகுதியை ‘கிளிக்’ செய்து மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். வெறும் தகவலாக மட்டும் அல்லாமல் புகைப்படங்கள், வீடியோ இணைப்பும் கொடுத்து புகார் அளிக்கலாம்.

இந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் குழு ஆட்களை அனுப்பி குறைகளை சரி செய்யும். மாநகராட்சியின் மொத்தமுள்ள 12 மண்டலங்களில் 8 மண்டலங்களின் சுகாதார பணிகளை தனியார் நிறுவனங்கள் கவனிக்கின்றன. பேஸ்புக்கில் வரும் புகார்களை உடனுக்குடன் சரி செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லி மாநகராட்சி பேஸ்புக் கணக்கை தொடங்குகிறது. சுகாதார பணிகளுக்காக பிரத்யேகமாக ஒரு மாநகராட்சி பேஸ்புக் தொடங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை’’ என்று டெல்லி மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் (பொறியியல்) அன்ஷு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.