Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்து வரி பாக்கியை வசூலிக்க ஜப்தி நடவடிக்கை

Print PDF
தினமலர்       11.01.2011

சொத்து வரி பாக்கியை வசூலிக்க ஜப்தி நடவடிக்கை


பாரிமுனை : பல ஆண்டுகளாக சொத்து வரி கட்டாத, கட்டடங்களில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டடங்கள், மனைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும், சொத்து வரியை கட்டாமல் ஆயிரக்கணக்கானோர் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். வரி கட்ட டிசம்பர் வரை அவகாசம் கொடுத்தும், செல்வாக்கை பயன்படுத்தி வரி கட்டாமல் இழுத்தடித்து வருகின்றனர்.வரி பாக்கியை பாரபட்சமின்றி வசூலிக்கவும், குறிப்பிட்ட வரையறைக்குள் செலுத்தாதவர்களுக்கு வட்டியுடன் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரி கட்டாதவர்கள் மற்றும் மாநகராட்சியின் அறிவிப்புகளுக்கு உரிய பதில் தராதவர்களின் கட்டடங்களில் உள்ள, பொருட்களை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் சென்னையிலுள்ள, 10 மண்டலங்களிலும் வரி பாக்கி உள்ளவர்களுக்கு, 15 நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நோட்டீஸ் பெற்று பணம் கட்டாதவர்களின் இடங்களுக்கு, அதிகாரிகளின் தனிப்படை சென்று ஜப்தி நடவடிக்கையை துவங்கியுள்ளனர்.இரண்டாவது மண்டலத்தில் மட்டும் 153 பேர், 10 கோடி ரூபாய் அளவில் வரிப் பாக்கி வைத்துள்ளனர். பாரிமுனை 28வது வார்டுக்குட்பட்ட சுங்கு ராம செட்டி தெருவில், தனியாருக்கு சொந்தமாக உள்ள ஒரு கட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக, சொத்து வரி கட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மண்டல அதிகாரி பூமிநாதன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் உட்பட தனிப்படை அதிகாரிகள், நேற்று வரி கட்டாத கட்டடத்தில் உள்ள பொருட்களை ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.இதனால் வாடகை கடைகாரர்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜப்தி செய்யவிடாமல் அதிகாரிகளை தடுத்தனர். பின், கட்டட உரிமையாளர் சார்பில், வரி பாக்கி தொகைக்கான வங்கி வரைவோலை கொடுத்ததால், ஜப்தி நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர். மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.