Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐ.டி., தொழிலுக்கான சிறப்பு கட்டடங்கள்: சி.எம்.டி.ஏ., புதிய உத்தரவு

Print PDF

தினமலர்                    28.07.2012

ஐ.டி., தொழிலுக்கான சிறப்பு கட்டடங்கள்: சி.எம்.டி.ஏ., புதிய உத்தரவு

சென்னை:தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான சிறப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார்.சலுகை: தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இதற்காக கட்டப்படும் கட்டடங்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை பெருநகர் பகுதியில், இத்தகைய கட்டடங்கள் கட்டும் திட்டங்கள் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும், சி.எம்.டி.ஏ.,வின், பலமாடி கட்டடங்களுக்கான பிரிவு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றன.தளபரப்பு குறியீட்டில், 50 சதவீதம் கூடுதலாக பயன்படுத்தும் வசதி, திறந்தவெளி நிலங்களை, அந்தந்த நிறுவனங்களே பயன்படுத்திக் கொள்ள அனுமதி என, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
காலியான கட்டடம்:இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பட்ட ஏராளமான தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள், பயன்படுத்தப் படாமல் காலியாக கிடக்கின்றன.

அரசின் சலுகைகள் பெற்று கட்டப் பட்டுள்ள இத்தகைய கட்டடங்களை, வேறு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, தகவல் தொழில்நுட்ப கட்டடங்களுக்கான திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. இதனால், இத்தகைய திட்டங்களுக்கு, திட்ட அனுமதி கொடுப்பதற்கான முக்கியத்துவமும் குறைந்து வருகிறது.

நடைமுறை மாற்றம்: இதுகுறித்து, சமீபத்தில் நடந்த சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் வெங்கடேசன் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக கட்டப்படும் அனைத்து கட்டடங்களுக்கான விண்ணப்பங்கள் இதுவரை, பலமாடி கட்டடங்கள் பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இதில், தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக கட்டப்படும், குறைந்த மாடிகள் கொண்ட சிறப்பு கட்டடங்களுக்கான விண்ணப்பங்கள் இனி, தொழிற்சாலை மற்றும் நிறுவன கட்டடங்களுக்கான பிரிவு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட அனுமதி  வழங்கும் பணிகள் மேற்கொள்ளப் படும்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.