Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெல்லிய பிளாஸ்டிக் விற்றால் நடவடிக்கை பாயும் :வியாபாரிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF
தினமலர்                30.07.2012

மெல்லிய பிளாஸ்டிக் விற்றால் நடவடிக்கை பாயும் :வியாபாரிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை


சென்னை : "சென்னையில், மெல்லிய பிளாஸ்டிக் விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறுவோர் மீது சட்டப்படி ஐந்தாண்டு சிறை, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. பறிமுதல் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, 40 மைக்ரானுக்கு குறைந்த தடிமன் உள்ள, மெல்லிய பிளாஸ்டிக்குகளை கட்டுப்படுத்தும் வகையில், அதிரடி சோதனையை மாநகராட்சி நடத்தி, டன் கணக்கிலான மெல்லிய பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தது. கொடுங்கையூர் பகுதியில், மெல்லிய பிளாஸ்டிக் தயாரித்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்கத்தினரையும் அழைத்து, மாநகராட்சி, விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தது. இந்நிலையில், கொத்தவால்சாவடி பகுதி கிடங்கு ஒன்றில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தி, 21.3 லட்ச ரூபாய் மதிப்பிலான, 18 டன் மெல்லிய பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
 
 மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்லிய பிளாஸ்டிக் உற்பத்தி செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்தாலும் விடமாட்டோம். சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, பிளாஸ்டிக் மொத்த வியாபாரிகளும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மீறி செயல்படுவோர் மீது, வழக்குப்போட்டு ஐந்தாண்டு சிறைத் தண்டனை, ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை உள்ளது. அதையும் செய்ய மாநகராட்சி தயங்காது. இவ்வாறு அவர் கூறினார். அறிவுறுத்தல் சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர், வியாபாரிகள் சங்கத் தலைவர் சங்கரன் கூறும்போது, "கடைகளில் மட்டும் சோதனை செய்யாமல், வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக்குகளையும் பறிமுதல் செய்வது வரவேற்கத்தக்கது. சென்னை பாரிமுனை, அதைச் சுற்றிய பகுதிகளில், ஏராளமான கிடங்குகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். வியாபாரிகளிடமும் மெல்லிய பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.