Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுக்குழாயில் தண்ணீர் திருடினால்...:பேரூராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர்               16.08.2012

 பொதுக்குழாயில் தண்ணீர் திருடினால்...:பேரூராட்சி எச்சரிக்கை

பொள்ளாச்சி : "சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், பொது குழாயில் தண்ணீர் திருடினால், வீட்டு குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்' என, பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு அம்பராம்பாளையம் ஆழியாறு ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, ஜமீன்ஊத்துக்குளி நீருந்து நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகத்திலுள்ள மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, பேரூராட்சியில் குடிநீர் பிரச்னை நீடித்து வருகிறது.
 
மின்வெட்டு பிரச்னையால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நீருந்து நிலையத்தில் இருந்து பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு வர ஏற்பட்டுள்ள சிக்கலால், மக்களுக்கு குறைந்தபட்சம் எட்டு முதல் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கும் நிலை உள்ளது. குடிநீர் கிடைக்காமல், மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பேரூராட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ள பொது குழாயில் வினியோகிக்கப்படும் நீரை, அப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளுக்கு "டியூப்' மூலம் கொண்டு செல்கின்றனர்.இதனால், மக்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பேரூராட்சி தலைவர் கார்த்திகேயன், செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் கூறியதாவது:மக்களுக்கு குடிநீர் வழங்க வைக்கப்பட்டுள்ள பொது குழாயில் இருந்து வீடுகளுக்கு "டியூப்' மூலம் குடிநீர் கொண்டு செல்லக்கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சமீபத்தில், ஆய்வு செய்து குழாயில் டியூப் பொருத்தி தண்ணீர் கொண்டு சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, டியூப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தற்போது, மீண்டும் இப்புகார் எழத்துவங்கியுள்ளது. உடனடியாக, அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது குழாயில் இருந்து தண்ணீர் திருடினால், வீட்டு குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும். பொது குழாயில் இருந்து தண்ணீர் திருடியவர்களுக்கு பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மக்களும், இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம்.
 
இவ்வாறு, அவர்கள் கூறினர்.நகரிலும் இதே நிலை: கிராமப்புறங்கள் மட்டுமின்றி பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பல குடியிருப்பு பகுதிகளில் பொது குழாயில் இருந்து "டியூப்' மூலம் தனிநபர் வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. போர்வெல் குழாயில் இருந்தும் இதுபோன்ற தண்ணீர் திருடுவது அதிகரித்துள்ளது. நகராட்சி அதிகாரிகள், ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டும் மக்களுக்கான குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.
Last Updated on Thursday, 16 August 2012 06:19