Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மணப்பாறையில் தரைக்கடைகள் இடிப்பு

Print PDF
தினமணி         05.03.2013

மணப்பாறையில் தரைக்கடைகள் இடிப்பு


திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்டு வந்த தரைக்கடைகளை அதிகாரிகள் திங்கள்கிழமை இடித்தனர்.

மணப்பாறை வரதராஜப் பெருமாள் கோவிலின் ஒரு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 25 தரைக்கடைகள் இருந்தன. இந்த கடைகளை நடத்தி வருபவர்களிடமிருந்து தினசரி கட்டணமாக குறைந்த தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டதாம்.

இதையடுத்து, நகராட்சி கூட்டத்தில் தற்போதுள்ள தரைக்கடைகளை இடித்து தரைமட்டமாக்கி, கட்டடங்களை கட்டி வாடகைக்கு விடுவது என முடிவு செய்யப்பட்டு, கடைகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தரைக்கடை வியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து, ஒரு மாதக் காலத்துக்கு தடை உத்தரவு பெற்றனர்.

தடை உத்தரவுக்கான காலம் முடிந்ததைத் தொடர்ந்து, நகராட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தரைக்கடைகளை இடிக்க முயற்சி மேற்கொண்ட போது வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தரைக்கடைகளை வியாபாரிகள் திங்கள்கிழமை காலை வரை காலி செய்யாததால் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு 25 கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

மணப்பாறை வட்டாட்சியர் குளத்தூர் பாண்டியன், டி.எஸ்.பி. மீனா, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடைகள் இடிக்கும் பணியை கண்காணித்தனர்.