Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 6 லட்சம் வரி பாக்கி: மகளிர் பூமாலை வணிக வளாகத்துக்கு சீல் அதிகாரிகளின் சமரசத்தால் திறக்கப்பட்டது

Print PDF
தினமணி           08.03.2013

ரூ. 6 லட்சம் வரி பாக்கி:  மகளிர் பூமாலை வணிக வளாகத்துக்கு சீல்  அதிகாரிகளின் சமரசத்தால் திறக்கப்பட்டது

தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு ரூ. 6 லட்சம் வரிபாக்கி செலுத்தாததால் மகளிர் பூமாலை வணிக வளாகத்துக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் சமரசத்துக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

தூத்துக்குடி டூவிபுரத்தில் மகளிர் சுயஉதவிக் குழு பயனடையும் வகையில் 2004-ல் இந்த வளாகம் கட்டப்பட்டது. எம்எல்ஏ அலுவலகத்துக்கு அருகேயுள்ள இக் கட்டடம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இங்குள்ள 24 கடைகளும் மகளிர் குழுவினருக்கு மாதம் ரூ. 250 வாடகை என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டன. கடந்த ஆண்டு வாடகை ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் இத் தொகையை தங்களால் கட்ட இயலாது என மகளிர் குழுவினர் தெரிவித்ததால் வாடகை ரூ. 400 ஆனது.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சிலர் வியாழக்கிழமை அந்த வளாகத்துக்குச் சென்று, கடைகளை அடைக்கும்படிக் கூறினர். பின்னர், பிரதான நுழைவு வாயிலையும், முன்பக்கக் கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

சொத்துவரி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனராம். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், கடைகளைத் திறக்க மறுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

தகவலறிந்த ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ச. பெருமாள் ஆகியோர் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசினர்.

அரசிடம் இருந்து பணம் வந்தால் மட்டுமே சொத்துவரி செலுத்த வேண்டும் என்பதால் கடைகளைத் திறக்கும்படி அவர்கள் தெரிவித்தனராம்.

இதுதொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 2004-ம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறைகூட சொத்துவரி செலுத்தப்படவில்லை. ரூ. 6 லட்சம் வரை பாக்கியுள்ளது. பலமுறை மகளிர் திட்ட அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியும் பதில் இல்லாததால் சீல் வைக்கப்பட்டது என்றார்.

ஆனால், மகளிர் திட்ட உயர் அதிகாரிகள் கூறும்போது, வணிக வளாகக் கடைகள் மூலம் ரூ. 9,200 மட்டுமே மாத வருமானம் கிடைக்கும். சிலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். அரசிடம் இருந்து பணம் வராததால் சொத்துவரி கட்ட முடியவில்லை என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ச. பெருமாள் கூறியதாவது: வணிக வளாகம் எவ்வித வணிக நோக்கத்துக்காகவும் கட்டப்பட்டதல்ல. மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயனடையவே கட்டப்பட்டது என்பதால் வருவாயைக் கருத்தில் கொள்ளக்கூடாது. சீல் வைக்கப்பட்ட கடைகளைத் திறக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம் என்றார்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை (மார்ச் 8) மகளிர் தினம் என்பதால், மகளிர் சுயஉதவிக் குழு வணிக வளாகம் சீல் வைக்கப்பட்ட விவகாரம் பெரிதாகிவிடும் என்ற தகவல் பரவியதால் மகளிர் திட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து கடைகளைத் திறக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு வளாகம் திறக்கப்பட்டது. இதனால், சுயஉதவிக் குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர்.