Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டடத்துக்கு "சீல்': ஆட்சியர் நடவடிக்கை

Print PDF

தினமணி              28.03.2013

அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டடத்துக்கு "சீல்':  ஆட்சியர் நடவடிக்கை


மதுரையில் உள்ளூர் திட்டக் குழும அனுமதியின்றி கட்டப்பட்டுவந்த 7 மாடி கட்டடத்துக்கு புதன்கிழமை அதிகாரிகள் "சீல்' வைத்தனர். ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் சாலையில், நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரேயுள்ள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதியின்றி அடுக்கு மாடி கட்டடம் கட்டுவதாக ஆட்சியருக்குப் புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து, ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின்பேரில், உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் அந்த கட்டடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர்.

அப்போது, மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் முன்பு பணியாற்றிய புகார்களுக்கு உள்ளான அதிகாரி ஒருவரிடம் முறைகேடாக அனுமதி பெற்றது தெரிய வந்தது.

இந்த அனுமதி ஏற்புடையதல்ல என்றும், முறையாக உள்ளூர் திட்டக் குழுமத்தில் வரைபட அனுமதி பெற்று கட்டடம் கட்டுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினராம்.

ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் அந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், மதுரை உள்ளூர் திட்டக் குழு உறுப்பினர்-செயலர் நாகராசன் தலைமையில் அதிகாரி மருதுபாண்டியன், மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி நகரமைப்பு அதிகாரி முத்துக்குமார் மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம், மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை அந்த அடுக்குமாடி கட்டடத்துக்குச் சென்று, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு எச்சரித்தனர். பின்னர், அந்த கட்டடத்துக்கு "சீல்' வைத்தனர்.

இதுகுறித்து உள்ளூர் திட்டக்குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரம் சதுர அடிக்குள்ளான குடியிருப்பு கட்டடத்துக்கு மட்டுமே மாநகராட்சி மூலம் கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால், இங்கு 7 மாடியில் கட்டடம் கட்டப்படுகிறது. மேலும் மீனாட்சியம்மன் கோவில் சுற்றுச் சுவரில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ள இக்கட்டடம் கோவில் கோபுரத்தைவிட உயரமாகக் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்துக்கு வரைபட அனுமதி கோரி, உள்ளூர் திட்டக் குழுமம் மூலம் தமிழக அரசிடம் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

விண்ணப்பித்திருந்தாலும் கோவில் கோபுரத்தை விட உயரமாகக் கட்டடம் எழுப்ப அனுமதி கிடைத்திருக்காது எனத் தெரிவித்தார்.