Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பரப் பலகைகள் வைக்க புதிய விதிமுறைகள்

Print PDF

தினமணி                      29.03.2013

விளம்பரப் பலகைகள் வைக்க புதிய விதிமுறைகள்


சென்னை மாவட்ட பகுதிகளில் நிரந்தர விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி விளம்பர பேனர்கள் மற்றும் தட்டிகள் 6 நாள்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: விளம்பரப் பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் அமைக்க 15 நாள்களுக்கு முன் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்ய வேண்டும்.

நிரந்தர விளம்பரப் பலகை வைப்பதற்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் அதன் உயரம் மற்றும் பிற அளவுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியன பற்றிய விவரங்கள் தகுதிவாய்ந்த பொறியாளரிடமிருந்து ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தனியார் இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கான தடையில்லாச் சான்று மற்றும் மாநில அல்லது மத்திய அரசு நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அதாவது உதவி செயற்பொறியாளர் அல்லது உதவி கோட்டப் பொறியாளர் நிலைக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலர்களிடம் தடையில்லாச் சான்று பெற்று இணைக்க வேண்டும். சென்னை மாநகராட்சி நிலமாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.

இதுதவிர வாகனங்கள், பாதசாரிகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு விளம்பரப் பலகைகள் வைப்பதால் எவ்வித இடையூறும் இல்லை என சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர்களிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பிக்கும் மனுவுடன் வைக்க வேண்டும்.

விளம்பர பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகில் வைப்பதற்கு அனுமதி இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குள்பட்ட இடங்களில் அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும்.

விளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைக்க விரும்புவோர் அதற்குரிய படிவும் 1 மாதிரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் உசூர் சிரஸ்ததாரை (பொது) தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்து கொள்ளலாம்.

டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் வைக்கப்படும் நாள் மற்றும் அகற்றப்படும் நாள் இரண்டும் சேர்த்து 6 நாள்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.