Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறிய கட்டடங்களை ஆய்வு செய்ய கமிட்டி

Print PDF
தினமலர்        29.03.2013

விதிமீறிய கட்டடங்களை ஆய்வு செய்ய கமிட்டி


கோத்தகிரி:"கோத்தகிரியில் அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, "கமிட்டி' அமைத்து ஆய்வு செய்தப்பின், நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் வாப்பு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சுந்தரி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள்: ராஜேஸ்வரி வடிவேல்: எனது வார்டுக்கு உட்பட்ட விநாயகர் கோவில் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை. தலைவர் வாப்பு: குறிப்பிட்ட பகுதியை ஆய்வு செய்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனிவாசன்: கோத்தகிரி நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டும், ராம்சந்த் நீரேற்று நிலையத்தில் இருந்து அனுமதி இல்லாமல் நேரடியாக 16 இணைப்புகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், நகரின் இதர பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேலும், எனது வார்டிற்கு உட்பட்ட ராம்சந்த் பகுதியில் நைட்டன் தியேட்டர் அருகில், பேரூராட்சியால் வழங்கப்பட்ட அனுமதிக்கு மேல், விதிகளை மீறி கட்டடம் கட்டப்படுவதை தடுக்கவேண்டும்.

அலுவலர் ராமகிருஷ்ணன்: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், நிர்ணயிக்கப்பட்ட அனுமதியை தாண்டி கட்டடம் கட்டப்பட்டிருப்பின், "கமிட்டி' அமைத்து ஆய்வு செய்தப்பின், நடவடிக்கை எடுக்கப்படும். கோபாலகிருஷ்ணன்: ஒரு ஆண்டுக்கு முன், அனைத்து வார்டுகளுக்கும் மூன்று தெருவிளக்குகள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை.

தலைவர் வாப்பு: மின்சார துறையில் ஆள் பற்றாக்குறை காரணமாக, பேரூராட்சி ஊழியர்களை பணியமர்த்தி பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக, படிப்படியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மணி: கோத்தகிரி ஹோம் பள்ளி அருகில் நடக்கும் நடைமேம்பாலம் பணிக்காக, "வெல்ட்' வைக்க மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இப்பணிக்காக செலவாகும் மின் கட்டணத்தை யார் கட்டுவது.
 
தலைவர் வாப்பு: குறிப்பிட்ட பணிக்காக ஒப்பந்ததாரர் 5 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியுள்ளார். பணி நடைபெறும் இடைப்பட்ட நாட்களில் செலவாகும் மின் கட்டணத்தை ஒப்பந்ததாரரே கட்டுவார். சரவணகுமார்: தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க, அனைத்து வார்டுகளுக்கும் "சின்டெக்ஸ்' வழங்கப்படுவதாக மன்ற கூட்டத்தில் அறிவித்து பல நாட்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 
சுகாதார ஆய்வாள் கண்ணன்: அதிக தண்ணீர் தட்டுபாடுள்ள வார்டுகளுக்கு சின்டெக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வார்டுகளுக்கு உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவா: காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் சாலை மற்றும் டானிங்டன் சாலையில் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவேண்டும். தலைவர் வாப்பு: நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளையன்: அந்தந்த வார்டுகளில் நடைபெறும் பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் கவுன்சிலர்கள், பணிகளை விரைந்து முடிக்காத காரணத்தால், மற்றப்பணிக்காக நிதி ஒதுக்குவது நிறுத்தப்படுகிறது. இதனால், கவுன்சிலர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தலைவர் வாப்பு: பணியை முடிப்பதற்காக, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.