Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம் தகவல் தெரிவிக்க நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர்                   02.04.2013

பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம் தகவல் தெரிவிக்க நகராட்சி வேண்டுகோள்


காஞ்சிபுரம்:பாதாள சாக்கடை இணைப்பு தர, யாராவது லஞ்சம் கேட்டால், உடனடியாக தகவல் தரலாம் என, காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சியில், 1975ம் ஆண்டு பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட்டது. சமீபத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டது. நகரில், 39 ஆயிரம் வீடுகளுக்கு, பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் வசதி உள்ளது.

இதுவரை, 15,700 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை விரிவாக்கப் பகுதியில், இணைப்பு கேட்டு, 300 பேர் விண்ணப்பித்துள்ளனர். பழைய இணைப்பு உள்ள பகுதிகளில், ஒரு சிலர் மட்டும் இணைப்புக்கு காத்திருக்கின்றனர்.

பாதாள சாக்கடை இணைப்புக்கு விண்ணப்பித்த, 15 நாட்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், நகராட்சியில் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, இணைப்பு வழங்கப்படுவதாகவும், இல்லையெனில் இழுத்தடிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, நகராட்சி பொறியாளர் சுப்புராஜ் கூறுகையில், ""பாதாள சாக்கடை பழைய இணைப்பு உள்ள பகுதிகளில், விண்ணப்பித்த உடனே இணைப்பு வழங்கி வருகிறோம். விரிவாக்கப் பகுதிகளில் மட்டும் தாமதமாகிறது. இணைப்புக்கு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக, புகார் எதுவும் வரவில்லை. அவ்வாறு ஊழியர்கள் கேட்டால், நேரடியாக என்னிடம் வந்து தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.