Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திற்பரப்பு அருவி: குத்தகைதாரர்கள் ஏலம் எடுக்காததால் பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூல்

Print PDF
தினமணி       03.04.2013

திற்பரப்பு அருவி: குத்தகைதாரர்கள் ஏலம் எடுக்காததால் பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூல்


குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிக்கு நிகழாண்டிற்கான குத்தகையை எடுக்க குத்தகைதாரர்கள் முன்வராததால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் திற்பரப்பு அருவியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் உரிமை கடந்த ஆண்டு ரூ. 27,70,100- க்கு குத்தகை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிகழாண்டில் இந்த அருவிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கு உரிமை வழங்குவதற்கான ஏலம் கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்றது.  இதில் ஒரே ஒரு குத்தகைதாரர் மட்டுமே வந்திருந்ததால் ஏலம் நடத்தப்படாமல் மாற்றி வைக்கப்பட்டு, கடந்த 30-ம் தேதி மீண்டும்  நடத்தப்பட்டது.

இதிலும் குத்தகைதார்கள் வரவில்லை. இந்நிலையில் ஏப்ரல் முதல் தேதி முதல் பேரூராட்சி சார்பில் இந்த அருவியில் நுழைவுக் கட்டணம், நீச்சல் குளத்தில் குளிக்கும் கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது.   இதற்காக பேரூராட்சிப் பணியாளர்களில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயலர் அலுவலர் சுப்புராஜ் கூறியதாவது:

 இரண்டு முறை ஏலம் அறிவிக்கப்பட்ட பின்பும் அருவியில் நுழைவுக்கட்டணம் வசூலிக்க போதிய குத்தகைதாரர்கள் வரவில்லை.

இதனால் பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  அடுத்த ஏலம் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

குலசேகரம் சந்தை: திற்பரப்பு அருவி போன்று குலசேகரம் பொது சந்தையில் தீர்வைக் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலத்திலும் போதிய குத்தகைதாரர்கள் வரவில்லை. இதனால் இங்கும் பேரூராட்சி ஊழியர்கள் தீர்வைக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.