Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"சொத்துவரி, குடிநீர் கட்டண நிலுவை: 15-க்குப் பிறகு அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமணி                 12.04.2013

"சொத்துவரி, குடிநீர் கட்டண நிலுவை: 15-க்குப் பிறகு அதிரடி நடவடிக்கை

கடலூர் நகராட்சிக்குச் சேர வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை வசூலிக்க, வரும் 15-ம் தேதிக்குப் பிறகு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து தெரிவித்தார்.

கடலூர் நகராட்சிக்குச் சேர வேண்டிய வரி பாக்கி ரூ.3.40 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.1.82 கோடி நிலுவையில் உள்ளது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக ரூ.7.20 கோடி சொத்துவரி வசூலாகாமல் உள்ளது.

இதனால் நகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரி பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து தினமணி நிருபரிடம் கூறியது: "கடலூர் நகராட்சிக்கு வர வேண்டிய வரிபாக்கி மற்றும் குடிநீர் கட்டண நிலுவையை வரும் 15-ம் தேதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்பிறகும் சொத்துவரி செலுத்தாத கட்டடங்களை ஜப்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களை வார்டு வாரியாக கணக்கெடுக்கும் பணியும் 15-ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும். குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு 2 மாதங்களுக்குள் துண்டிக்கப்படும்.

சொத்துவரி தொடர்பாக நீதிமன்ற வழக்குகளின் நிலை குறித்து ஆராய்ந்து வருகிறோம். வழக்குகள் முடிந்த நிலையில் வசூல் செய்யப்படாமல் உள்ள சொத்து வரியை உடனடியாக வசூல் செய்யவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து சொத்து வரியை முழுமையாக வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் கடை வைத்திருப்பவர்கள் 15-ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த தவறினால் 16-ம் தேதி காலை நகராட்சி நிர்வாகம் மூலம் கடைகள் பூட்டப்படும்.

மொத்தத்தில் இன்னும் 2 மாதங்களில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவை முழுமையாக வசூல் செய்யப்படும். செலுத்தாதவர்களின் சொத்துகளை ஜப்தி செய்யவும், குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் முடிவில் நகராட்சி நிர்வாகம் உறுதியாக இருக்கிறது' என்றார்.