Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

11 ஊராட்சிகள், வல்லம் பேரூராட்சி இணைக்க முடிவு

Print PDF
தினமணி        13.04.2013

11 ஊராட்சிகள், வல்லம் பேரூராட்சி இணைக்க முடிவு


தஞ்சை நகராட்சியில் 11 ஊராட்சிகளையும், வல்லம் பேரூராட்சியையும் இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என ஏப். 10-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, இந்த மாநகராட்சியில் இணைக்கப்படும் பகுதிகள் தொடர்பாக முடிவு செய்ய தஞ்சை நகர்மன்றத்தில் வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் பேசியது:

தஞ்சை நகராட்சியின் பரப்பளவு 36.33 சதுர கிலோ மீட்டர்.

இந்த நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,22,619 பேர் உள்ளனர். நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 36.98 கோடியாக உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை, பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள், விமானப்படை தளம் போன்றவற்றால் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், தொழிற்சாலைகள் ஆகியவை அதிகரித்து வருகின்றன. எனவே, தஞ்சை நகராட்சியில் வல்லம் பேரூராட்சி, மாரியம்மன்கோவில், கத்திரிநத்தம், புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையார்பட்டி, நீலகிரி, ராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி ஆகிய 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும்.

இதன்மூலம், மாநகராட்சியின் பரப்பளவு 128.02 சதுர கிலோ மீட்டராகவும், மக்கள்தொகை 3,51,655 எனவும், ஆண்டு வருமானம் ரூ. 43.19 கோடியாகவும் அதிகரிக்கும் என்றார் சாவித்திரி கோபால்.

இதையடுத்து, இந்தத் தீர்மானமும், தஞ்சை மாவட்டத்துக்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.