Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர் ஆய்வு

Print PDF
தினமணி          15.04.2013

பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர் ஆய்வு


முதுகுளத்தூர், சாயல்குடி, அபிராமம், கமுதி ஆகிய பேரூராட்சிகளில்  வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் சுந்தரராஜ்  ஆய்வு செய்தார்.

அபிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு வளாகத்துக்கு ரூ.9 லட்சம்  செலவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி, நரியன் சுப்பராயபுரத்தில் நபார்டு நிதி ரூ.20 லட்சம் செலவில் ஊருணி ஆழப்படுத்துதல், சுற்றுச் சுவர் கட்டுதல், படித்துறை கட்டுதல் ஆகிய பணிகளை அமைச்சர் சுந்தரராஜ் பார்வையிட்டார்.

அப்போது சிவகங்கை மண்டலப் பேரூராட்சிகள் உதவி செயற் பொறியாளர் சுரே ஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராம் ஆகியோர் பணிகள் குறித்து விவரித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கவுன்சிலர்கள் முத்துச்செல்லம், சுப்பிரமணியன், புவனேஸ்வரி, பொன்னரசி பூபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் கமுதி சென்ற அமைச்சர் பஸ் நிலையம் அருகே ரூ.40 லட்சம் செலவில்  பேரூராட்சி அலுவலகத்துக்கு கட்டடம் கட்டும் பணி, ரூ.25 லட்சம் செலவில் செட்டி ஊருணிக் கரையைப் பலப்படுத்தி நடைப் பயிற்சி பாதை அமைக்கும் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

அவரிடம் பேரூராட்சித் தலைவர் எஸ்.கே.சி. ரமேஷ் பாபு, உதவி செயற் பொறியாளர் சுரேஷ் குமார், செயல் அலுவலர் ஏ. தனபாலன் ஆகியோர் பணிகள் குறித்து விவரித்தனர்.

சாயல்குடி சென்ற அமைச்சர் தலா ரூ.50 லட்சம் செலவில் பேரூராட்சி அலுவலகம்  கட்டுதல், சிவன் கோயில் ஊருணி, ஆராட்டு ஊருணி மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சரிடம் பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி கண்ணப்பன், துணைத் தலைவர் குணசேகரன், உதவி செயற் பொறியாளர் சுரேஷ் குமார், செயல் அலுவலர் அபுகலாம் ஆசாத் ஆகியோர் பணிகள் குறித்து விவரித்தனர்.

கடைசியாக முதுகுளத்தூர் சென்ற அமைச்சர் சுந்தரராஜ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சரவணப் பொய்கை ஊருணியை நபார்டு வங்கி நிதி ரூ.85 லட்சம் மூலம் மேம்படுத்துதல், ஊருணியைச் சுற்றிலும் நடைப் பயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைப்புப் பணிகள் நடைபெறுவதைப் பார்வையிட்டார்.