Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி விற்பனை செய்த 8 பேருக்கு அபராதம் விதிப்பு

Print PDF
தினமலர்        26.04.2013

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி விற்பனை செய்த 8 பேருக்கு அபராதம் விதிப்பு


நரசிங்கபுரம்: ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், மகாவீர் ஜெயந்தி தினத்தில், இறைச்சி விற்பனை செய்த, எட்டு பேருக்கு, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.மகாவீர் ஜெயந்தி தினமான, நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும் மதுபானம், இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில், ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில், இறைச்சி விற்பனை கனஜோராக நடந்தது.
 
மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, ஆத்தூர் தாசில்தார் தங்கராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளுக்கு சென்று, இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என, எச்சரிக்கை செய்தனர்.தொடர்ந்து, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, சுகாதார அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதையடுத்து, ஆத்தூரில், 16 கடைகள், நரசிங்கபுரத்தில், 12 கடைகள் என, மொத்தம், 28 இறைச்ச கடைகளுக்கு, நோட்டீஸ் வழங்கினர்.
 
இதில், இறைச்சி விற்பனை செய்த, நரசிங்கபுரம் குணசேகரன், காமராஜ், சேகர், கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், முருகேசன், ஆத்தூர் தியாகராஜன், இதயதுல்லா ஆகிய எட்டு பேருக்கு, தலா, 500 ரூபாய் வீதம், மொத்தம், 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.ஆத்தூர் நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. மகாவீர் ஜெயந்தி தினத்தில், 30க்கும் மேற்பட்ட கடைகளில் இறைச்சி விற்பனை செய்தபோதும், ஒரு சிலருக்கு மட்டும், "அபராதம்' விதிக்கப்பட்டுள்ளது என, புகார் எழுந்துள்ளது.