Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இணையதளம் மூலம் வரி செலுத்துவது கட்டாயம்

Print PDF
தினமணி        26.04.2013

இணையதளம் மூலம் வரி செலுத்துவது கட்டாயம்


புதுச்சேரியில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வணிக வரி செலுத்துவோர் இனி கட்டாயம் இணையதளம் மூலமே அதனைச் செலுத்த வேண்டும் என்று வணிகவரித்துறை அறிவித்திருக்கிறது.

இது குறித்து வணிக வரித்துறை ஆணையர் ல.குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி, புதுச்சேரி வணிகவரித்துறை மூலம் பல்வேறு இணையதளச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஐ.ஓ.பி., பரோடா வங்கி, இந்தியன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் மூலம் இணையதளம் மூலம் வரி செலுத்தும் வசதி செயல்படுத்தப்படுகிறது.  தற்போது மொத்த வரி வசூலில் 30 விழுக்காடு இணையதளம் மூலமே பெறப்படுகிறது. இந்த முறையில் வரி செலுத்துவதால், வணிகர்களின் கால விரயம் தவிர்க்கப்படுகிறது.

மேலும் தற்போது காசோலை, வரைவோலை மூலமும் வரி செலுத்துவது அதிகரித்துள்ளது. இவ்வாறு செலுத்துவதால், அவை வங்கிக்குச் சென்று அரசுக் கணக்கில் வரவு வைக்க 5 முதல் 10 நாள்கள் வரை ஆகிறது. ஆனால் இணையதளம் மூலம் வரி செலுத்தினால், அடுத்த நாளே அரசுக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

எனவே ரூ.1 லட்சத்துக்கு மேல் வரி செலுத்தும் வணிகர்கள், மே 1-ம் தேதி முதல் இணையதளம் மூலமே வரி செலுத்த வேண்டும்.  மேலும் இணையதளம் மூலம் ஒரு முறை வரி செலுத்தியிருந்தாலும், தொடர்ந்து அதன் மூலமே வரி செலுத்த வேண்டும்.  இதற்காக 5 வங்கிகளிலும் இருப்பு ஏதும் இல்லாமல் கணக்குத் தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட 5 வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திராத வணிகர்கள், உடனடியாக அங்கு தங்கள் கணக்கைத் தொடங்க வேண்டும்.

மேலும் தங்களின் சொந்தக் கணக்கில் இருந்து, 5 வங்கிகளில் ஒன்றில் தொடங்கப்படும் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்து, அங்கிருந்து இணையதளம் மூலம் வரி செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.