Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் தனியார் மீது நடவடிக்கை நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை

Print PDF
தினமலர்          30.04.2013

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் தனியார் மீது நடவடிக்கை நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை


பள்ளிபாளையம்: ""தனியார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிபாளையம் கவுன்சில் கூட்டத்தில் நகராட்சி சேர்மன் வெள்ளியங்கிரி கூறினார்.பள்ளிபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்ரமணி, கமிஷனர் முத்து வெங்கடேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:கோபால் (அ.தி.மு.க.,): வசந்த நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், தனியார் மூலம் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும் லாரி மூலம் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது.

அதன் காரணமாக, அருகில் உள்ள என் வார்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போர்வேலில் தண்ணீர் வறண்டுள்ளது. அதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீருக்காக கடும் அவதிப்படுகின்றனர்.வெள்ளியங்கிரி (சேர்மன்): தனியார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்ரமணி (துணைத் தலைவர்): சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தண்ணீர் விற்பனை செய்ய வேண்டாம், என அறிவுறுத்த வேண்டும். அதையும் மீறி தண்ணீர் சப்ளை செய்தால், லாரியை பிடித்து வைத்துக் கொண்டு, எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.குணசேகரன் (தி.மு.க.,): என் வார்டில், தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

மூன்று இடங்களில் நீர்மட்டம் நன்றாக உள்ளது. விரைவில் போர்வேல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேர்மன்: போர்கால அடிப்படையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் போர்வேல் அமைக்கப்படும்.துணைத்தலைவர்: கோடைகாலம் என்பதால், அனைத்து வார்டுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலை.

எனவே, பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் அனைவரும், சூழ்நிலையை எடுத்துக்கூற வேண்டும். தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.குணசேகரன் (தி.மு.க.,): மூன்று, நான்கு வார்டுகளுக்கு ஒருவரே தண்ணீர் திறந்து விடும் பணியை மேற்கொண்டுள்ளார். அதனால், குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை. கூடுதலாக ஆட்கள் நியமனம் செய்ய வேண்டும்.சேர்மன்: தண்ணீர் அடிப்படை தேவை என்பதால், விரைவில் நடவடிக்கை எடுத்து, கூடுதல் ஆட்கள் நியமனம் செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.