Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுவர்களில் விளம்பரம் எழுதினால் நடவடிக்கை குன்னூர் நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை

Print PDF
தினமலர்          29.04.2013

சுவர்களில் விளம்பரம் எழுதினால் நடவடிக்கை குன்னூர் நகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை


குன்னூர்:"குன்னூர் நகராட்சி சுவர்களில் விளம்பரம் எழுத கூடா­து; மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கைப்பட்டுள்ளது. குன்னூர் நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதங்கள்: சத்தார்: குறைந்த வருவாய் குடியிருப்புகளுக்கான வாடகையை, 79 ரூபாயிலிருந்து, 820 ரூபாயாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதை சற்று குறைக்க வேண்டும். தலைவர்: குறைந்த வருவாய் குடியிருப்புகளுக்கான வாடகை 450 ரூபாயாக நிர்ணயக்கப்படும்.

குணசீலன்: நெடுஞ்சாலைத்துறை அலுவலம், வண்ணாரப்பேட்டை உட்பட பல இடங்களில் தண்ணீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்தால் தண்ணீர் சேமிக்கப்படும்.

தலைவர்: தண்ணீர் கசிவு கண்டறிந்து 80 சதவீதம் சரி செய்யப்பட்டுள்ளது.

நசீர்கான்: எனது வார்டில் குப்பைகள் தேங்கியுள்ளன. தற்போது, திருவிழா நடந்து வரும் நிலையில், குப்பையை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபி: குன்னூரின் முக்கிய சுற்றுலா ஸ்தலமான சிம்ஸ் பூங்கா பகுதியில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் சாலையோரம் போட்பட்டுள்ளன. இவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கமிஷனர் சண்முகம்: புதிய குடிநீர் திட்டத்துக்கான பணிகள் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. பணியை தொடர தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் அனுமதி கோரியுள்ளது. அதிகாரிகளிடம் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. யோகேஷ்கண்ணன்: எனது வார்டில் உள்ள பாரதியார் மண்டபத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை சமுதாய கூடமாக மாற்றினால் நகராட்சி வருவாய் கிடைக்கும். தலைவர்: மாவட்ட நிர்வாகம் சார்பில் புயல் நிவாரண மையமாக அது செயல்பட்டு வருகிறது. இதை வேறு பணிக்கும் மாற்ற முடியாது.

யோகேஷ்கண்ணன்: நகராட்சி சார்பில் காவலாளி நியமிக்க வேண்டும். சத்தார்: மருத்துவமனை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 மாத காலமாகி விட்டது. சாலையில் மண் அப்படியே கிடக்கிறது. இதனால், பிணவறை மற்றும் வண்ணாரப்பேட்டை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கமிஷனர்: பொதுப்பணித்துறை தான் பொறுப்பு. மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 88 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்ட திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சையது முபாரக்: எனது வார்டில் தெரு விளக்குகள் எரிவதில்லை. பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்: பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகராட்சி சுவர்களில் யாரும் விளம்பரம் எழுத கூடாது, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவாதங்கள் முடிந்த பின்னர், கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.