Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நேற்று மூன்று! வணிக வளாக கட்டடங்களுக்கு "சீல்' மாநகராட்சி அதிரடி தொடர்கிறது

Print PDF
தினமலர்         03.05.2013

நேற்று மூன்று! வணிக வளாக கட்டடங்களுக்கு "சீல்' மாநகராட்சி அதிரடி தொடர்கிறது


கோவை:கோவை மாநகராட்சி பகுதியில், விதிமுறை மீறிய வணிக கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. இதுவரை 39 கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது.கோவை தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, மாநகராட்சி எல்லைக்குள் விதிமுறை மீறி கட்டிய கட்டடங்கள் மீது, உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உத்தரவுப்படி, கடந்த 27ம் தேதி, முதல், விதிமீறல், அனுமதியற்ற கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மாநகராட்சியில் ஐந்து மண்டலத்திலும் சேர்த்து 36 கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது.

நான்காம் நாளான நேற்று, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், கிழக்கு மண்டலத்தில் ஒரு வணிக வளாகம், வடக்கு மண்டலத்தில் இரு கட்டடங்கள் என, மொத்தம் மூன்று கட்டடங்களுக்கு, "சீல்' வைத்தனர்.நகரமைப்பு அலுவலர் வரதராஜன் கூறுகையில், "" கோவையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 55 கட்டடங்களில், இதுவரை 28 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்டடங்களுக்கு "சீல்' வைக்கச் சென்ற போது, அதன் அருகிலிருந்த, 11 கட்டடங்களில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கும் "சீல்' வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 கட்டடங்களில் குடியிருப்புகளாக உள்ள இரண்டு கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,''.

"25 கட்டடங்களுக்கு, 24 மணி நேரத்தில் காலி செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதிக்குள் "சீல்' வைக்கும் பணி நிறைவடையும். கடந்த 27ல் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, குடியிருப்பு ஒன்றுக்கு "சீல்' வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் இன்று "சீல்' வைக்கப்பட்டது,'' என்றார்.