Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரமில்லாத உணவு: ஹோட்டலுக்கு "சீல்'

Print PDF
தினமணி        05.05.2013

சுகாதாரமில்லாத உணவு: ஹோட்டலுக்கு "சீல்'


கொடைக்கானலில் சுகாதாரமில்லாத உணவை விற்பனை செய்த தனியார் ஹோட்டலுக்கு அதிகாரிகள் "சீல் ' வைத்தனர்.

கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானல் பகுதிகள் மற்றும் சுற்றுலா இடங்களில் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் சாலைப் பகுதிகளில் திடீரென நடமாடும் கடைகளும், உணவகங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள் தரமில்லாததாக இருப்பதாக புகார் கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏரிச்சாலைப் பகுதியில் லாஸ்காட் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பிற்பகலில் உணவு சாப்பிட்டனர். அவர்களில் 5 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.

இதுகுறித்து அறிந்ததும் கொடைக்கானல் சுகாதாரத் துறை ஆய்வாளர் அசன்முகமது மற்றும் நகராட்சி பணியாளர்கள் குறிப்பிட்ட ஹோட்டலுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த ஹோட்டலில் சுகாதாரமின்மை மற்றும் பல்வேறு காரணத்தால் அந்த ஹோட்டலைத் தொடர்ந்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டு பூட்டு போட்டனர்.  இதுதொடர்பாக ஹோட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சாகுல்ஹமீது கூறியதாவது: கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அந்த ஹோட்டலில் ஆய்வு செய்யப்பட்டது.

அங்கு சுகாதாரமின்றி இருந்த உணவுப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டன. சுத்தமில்லாத தண்ணீரைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் அனுமதியில்லாமல் ஏரி நீரை மோட்டார் வைத்து ஊறிஞ்சி எடுத்து வந்துள்ளனர். இதனால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பல ஹோட்டல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமில்லாமல் செயல்படும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.