Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உரிமையாளர்களுக்கு நகராட்சி எச்சரிக்கை:கட்டடங்களுக்கு அவசரகால வழி அவசியம்

Print PDF
தினமலர்        08.05.2013

உரிமையாளர்களுக்கு நகராட்சி எச்சரிக்கை: கட்டடங்களுக்கு அவசரகால வழி அவசியம்


பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட அடுக்குமாடி கட்டடங்களில் தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் முறையாக பயன்படுத்த வேண்டும், அவசர கால வழி, ஏற்படுத்த வேண்டும் என்று கட்டட உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களில் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஏற்கனவே நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் கோவையிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு நான்குபேர் இறந்தனர். இதையடுத்து, அடுக்குமாடி கட்டடங்களில் தீத்தடுப்பு சாதனங்களை பொருத்துமாறும், அவசரகால வழி ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட அடுக்குமாடி கட்டட உரிமையாளர்களை நேற்று அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.தீ தடுப்பு பாதுகாப்பு முறை குறித்து தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் புளுகாண்டி பேசுகையில், ""தானியங்கி தீத்தடுப்பான், அறைக்கு ஏற்றாற் போல் தீ தடுப்பு சாதனங்கள், அனைத்து கட்டடங்களிலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஒரு கட்டடத்துக்கு இரண்டு வழி விட வேண்டும். பிரம்மாண்டமான நுழைவு வாயிலை ஏற்படுத்த வேண்டும் அவசரகாலவழியை தனியாக ஏற்படுத்தவேண்டும். அந்த வழியை எக்காரணத்தை கொண்டும் அடைக்கக்கூடாது,'' என்றார்.இதை 15 நாட்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன், நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் ஆகியோர் கூறினர். கூட்டத்துக்கு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.