Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் பணி நிறுத்தம் 15 நாள் அவகாசம் அளித்து கலெக்டர் உத்தரவு

Print PDF
தினமலர்            10.05.2013

விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் பணி நிறுத்தம் 15 நாள் அவகாசம் அளித்து கலெக்டர் உத்தரவு


கோவை:கோவையில் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் நடவடிக்கை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கட்டட உரிமையாளர்களும் தீத்தடுப்பு மற்றும் அவசர கால வசதிகளை சரி செய்ய, மாவட்ட நிர்வாகம் 15 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

கோவை, அவிநாசி ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில், ஏப்., 25ல் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பெண்கள் பலியாகினர். இதையடுத்து, விதி மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது மாநகராட்சியும், உள்ளூர் திட்டக் குழுமமும் நடவடிக்கை எடுத்து வந்தன. மாவட்ட, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகர் ஊரமைப்பு சட்டம் -1971ன் பிரிவு 56, 57ன் கீழ் அனுமதியற்ற மற்றும் அனுமதிக்கு மாறாக இருந்த 59 கட்டடங்கள் "சீல்' வைக்கப்பட்டன. விதிமீறல் கட்டடங்கள் மீது, "சீல்' வைக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதற்கு, மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தும், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமான துறையினர், மருத்துவமனை நிர்வாகங்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. கோவை கட்டுமானத் துறை கூட்டு நடவடிக்கைக் குழு, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனத்தினர், கூடுதல் கால அவகாசம் கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

"மாவட்டத்தில் உள்ள கட்டட வரைமுறைகள், கடந்த காலத்தில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப அமைந்துள்ளன; வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப, சட்ட விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு குறைகளை சீர் செய்வதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். "சீல்' வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்' என இந்த அமைப்புகள் வலியுறுத்தின.

இதையடுத்து, கடந்த இரு வார காலமாக நடைமுறையில் இருந்த அதிரடி நடவடிக்கையை, மாவட்ட நிர்வாகம் தளர்த்தியுள்ளது.

கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதற்குள் அனைத்து கட்டட உரிமையாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்படி சரி செய்துக் கொள்ள வேண்டும். அனைத்து கட்டடங்களிலும் தீத்தடுப்பு மற்றும் அவசர கால வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 2007ம் ஆண்டுக்கு முன் உள்ள கட்டடங்களுக்கு, அரசு விதி தளர்வு செய்து அனுமதிக்கப்பட்ட சலுகையை பயன்படுத்தி வரைமுறை செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.