Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கான வரி விதிப்பை ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு கமிஷனர் தகவல்

Print PDF
தினத்தந்தி                     12.05.2013

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கான வரி விதிப்பை ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு கமிஷனர் தகவல்


வேலூர் மாநகராட்சி பகுதியில் கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி சரியான முறையில் விதிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் தெரிவித்தார்.

வரி விதிப்பு


வேலூர் மாநகராட்சி வார்டுகளில் தினந்தோறும் வீடுகள், கட்டிடங்கள், விடுதிகள், வணிக வளாகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன. அதுபோல பல பகுதிகளில் வீடுகள், விடுதிகளாகவும் மாற்றப்படுகின்றன.

ஆனால் புதிய கட்டிடங்களுக்கு மாநகராட்சியில் வரி போடுவதில்லை என்றும், கட்டிட உரிமையாளரே சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி எங்கள் கட்டிடத்துக்கு வரி போடுங்கள், அந்த ரசீது பல காரியங்களுக்கு தேவைப்படுகிறது என்று கேட்டாலும் வரி போடுவதில்லை என்கிற புகாரும் நிலவுகின்றன. இன்னொரு தரப்பில் சில கட்டிடங்களுக்கு மிக குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளது என்றும், வீடுகளை விடுதிகளாக மாற்றிய பிறகும் விடுதிக்கான வரியை (அதிக வரி) விதிக்காமல் குறைந்த வரியே (அதாவது ஏற்கனவே வீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த வரியே) வசூலிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அத்துடன் சரியான வரியை விதித்து வரி வசூல் பணியை முடுக்கிவிட்டால் மாநகராட்சிக்கு போதுமான வருமானம் கிடைக்கும் என்றும் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டபாணி மற்றும் கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த கமிஷனர் ஜானகி, வரி விதிப்பை ஆய்வு செய்ய ‘ஒரு கமிட்டி’ அமைக்கப்படும் என்றார்.

பணி தொடங்கி விட்டது


அந்த கமிட்டி அமைக்கப்பட்டு விட்டதா? அந்த கமிட்டி யார் தலைமையில் இயங்கும் என்பது பற்றி கமிஷனரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

வேலூர் மாநகராட்சியில், தாராபடவேடு, சத்துவாச்சாரி, வேலூர், சேண்பாக்கம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. அந்தந்த மண்டல அலுவலர் தலைமையில் வரி விதிப்பை ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது.

அந்த கமிட்டியில் வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர், சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் ஆகிய 4 பேர் உள்ளனர்.

அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதா? சரியான வரி விதிக்கப்பட்டுள்ளதா? அல்லது குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதா? வீடுகளை விடுதிகளாக மாற்றிய பிறகு விடுதிக்கான வரி விதிக்கப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். இதற்கிடையே வீட்டு உரிமையாளர்களோ அல்லது கட்டிட உரிமையாளர்களோ ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்பினால் அவர்கள் அந்தந்த மண்டல அலுவலகம் சென்று சம்மந்தப்பட்ட அலுவலரை சந்தித்து கூறலாம்.

நடவடிக்கை

மேலும் அந்த கமிட்டியிடம் வருகிற 31–ந்தேதிக்குள் ஆய்வை முடித்து அறிக்கை தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.