Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் இணைப்புகள் கணக்கெடுப்பு

Print PDF
தினமலர்                    13.05.2013

குடிநீர் இணைப்புகள் கணக்கெடுப்பு


பொன்னேரி: பேரூராட்சியில், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.பொன்னேரி பேரூராட்சியில், 18 வார்டுகளில், 6,668 குடியிருப்புகளும், 1,542 வணிக நிறுவனங்களும் உள்ளன. இவற்றில், 2,793 குடிநீர் இணைப்புகள் மட்டுமே பேரூராட்சி கணக்கில் உள்ளன. மீதம் உள்ளவற்றில், பெரும்பாலானவை உரிய அனுமதி இன்றியும், முன் வைப்பு தொகை செலுத்தாமலும், குடிநீர் இணைப்புகள் வைத்து உள்ளன.மாத குடிநீர் கட்டணம் மற்றும் முறையான இணைப்பு கட்டணம் மூலமாக, பேரூராட்சிக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், பொன்னேரி பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இது தொடர்பாக கடந்த, 1ம் தேதியன்று, "தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், பொன்னேரி பேரூராட்சியில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் குறித்து, ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது.இதற்காக மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பொன்னேரியில் முகாமிட்டு, இருதினங்களாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

ஒவ்வொரு பேரூராட்சி செயல் அலுவலருக்கும், இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் பேரூராட்சி குடிநீரை பயன்படுத்துபவர்களின் விவரம், அவர்கள் அனுமதி பெற்றுள்ளனரா?, அதற்கான ரசீது வைத்துள்ளனரா? தெருகுழாய்கள் பயன்படுத்துபவர்கள், சொந்தமாக ஆழ்துளை மோட்டார் வைத்திருப்பவர்கள் என, வீடுகள் தோறும் சென்று விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 450க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என, கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்புகள் வைத்திருப்பவர்கள் மீதான, அபராத நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.