Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு "சீல்'

Print PDF
தினமணி         22.05.2013

மதுரையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு "சீல்'

மதுரை மாநகராட்சிப் பகுதியில், உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதியின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகிலுள்ள சம்பக்குளத்தில் காதர்முத்து என்பவர், தரைத் தளத்துடன் கூடிய 3 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டியுள்ளார். 6,000 சதுர அடியில் 6 வீடுகளை உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ள இக் கட்டடத்துக்கு, வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா என உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மதுரை மாநகராட்சியில் முன்பு நகரமைப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், மாநகராட்சியின் அதிகார வரம்பை மீறி முறைகேடாக இந்த கட்டடத்துக்கு அனுமதி வழங்கியிருப்பது தெரியவந்தது.  

உள்ளூர் திட்டக் குழுமத்தில் விண்ணப்பித்து கட்டட வரைபட அனுமதி பெறாத இந்த கட்டடத்துக்கு "சீல்' வைக்க மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இந்த கட்டடத்துக்கு உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் சங்கரமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் சென்று "சீல்' வைத்தனர்.

இதேபோன்று, எல்லீஸ்நகர் தொலைத்தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஒய்டபிள்யூசிஏ அமைப்பு சார்பில் தரைத்தளத்துடன் கூடிய 5 அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

30,000 சதுர அடியில் கட்டடப்பட்டுள்ள இக் கட்டடத்துக்கு உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதி பெறப்படவில்லை. அதேசமயம், முந்தைய மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் பணியாற்றிய அலுவலர் ஒருவரிடம் முறைகேடாக அனுமதி பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இந்தக் கட்டடத்துக்கும் உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.