Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை என்ன? மாநகராட்சி கமிஷனர் லதா விளக்கம்

Print PDF
தினத்தந்தி               22.05.2013

கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை என்ன? மாநகராட்சி கமிஷனர் லதா விளக்கம்


கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை என்ன? என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்தார்.

சிறுவாணி அணை

கடந்த ஆண்டுகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் (ஜூன்) தென்மேற்கு பருவமழை பெய்தால் தான் சிறுவாணி அணை உயிர் பெறும் நிலையில் உள்ளது.

சிறுவாணி அணையில் தற்போது நீர்மட்டம் இருப்பு நிலைக்கு கீழ் சென்று விட்டதால், தற்போது ரூ.66 கோடி செலவில் ஆற்றில் மோட்டார்கள் மூலம் பம்பிங் செய்து கோவைக்கு குடிநீர் கொண்டுவரப்படுகிறது.

சிறுவாணியில் இருந்து தினசரி 95 எம்.எல்.டி வரை எடுக்கப்பட்டு வந்த தண்ணீர் வெகுவாக குறைந்தது. தற்போது மோட்டார் மூலம் பம்பிங் செய்வதால் 25 முதல் 30 எம்.எல்.டி அளவில் தினசரி தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி பகுதியில் குறிப்பிட்ட வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது.

பில்லூர் முதல், 2–வது திட்டம்


சிறுவாணி அணையை பொறுத்தவரை இருப்பு நிலைக்கு கீழே போய், மோட்டார் வைத்து பம்பிங் செய்யும் நிலைக்கு வந்து விட்டதால், இன்னும் எத்தனை நாட்கள் தண்ணீர் கிடைக்கும் என்பது நம்பிக்கையில்லாத நிலையில் உள்ளது. அதற்குள் மழை வந்தால் தான் சிறுவாணி உயிர் பெறும்.

இந்த நிலையில், சிறுவாணியை தவிர பில்லூர் முதல், மற்றும் 2–வது குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்ட அளவான 125 எம்.எல்.டியில் இருந்து 120 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதி வார்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இது தவிரகுறிச்சி குனியமுத்தூர் பகுதிகளில் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. மேலும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 11 எம்.எல்.டி தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இருந்தாலும் கோவை மாநகராட்சியில் பகுதியில் சில வார்டுகளில் குடிநீர் வருவது பிரச்சினையாக உள்ளது. இருந்தாலும் பல வார்டுகளில் வாரத்துக்கு ஒரு முறை என்ற வகையில் கிடைத்து விடுகிறது. இருந்தாலும் பல வார்டுகளில் குடிநீர் போதிய அழுத்தம் இல்லாமல் குறைவாக வருகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் எப்போது தண்ணீர் வரும் என்ற கேள்விக்குறியும் உள்ளது.

மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் லதா விடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:– கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் சிறுவாணி குடிநீர் தற்போது 9 வார்டுகளில் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. பில்லூர் முதல், 2–வது திட்டத்தின் மூலம் தினசரி 120 எம்.எல்.டி கிடைக்கிறது. இருந்த போதிலும் குடிநீர் வினியோகத்தில் மின்தடை காரணமாக பம்பிங் செய்வதில் பிரச்சினை உள்ளது. இதனால் அழுத்தம் குறைவாக உள்ள சில வார்டுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாகவும், குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இது தவிர பில்லூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் குறையவில்லை. சிறுவாணியும் தற்போது பம்பிங் செய்வதால் 9 வார்டுகளுக்கு வந்து விடுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு என்பது கோவை மாநகரை பொறுத்தவரை இல்லை. மேற்கண்ட சில காரணங்களால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினை கடுமையாகும் போது, சில வேளைகளில் லாரித்தண்ணீரும் வினியோகம் செய்யப்படுகிறது. ஆகவே குடிநீர் பிரச்சினை என்பது மாநகராட்சி பகுதியில் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.