Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை மேயர் தகவல்

Print PDF
தினத்தந்தி       22.05.2013

கோவை ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை மேயர் தகவல்


கோவை ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திட்டமிட்டபடி கழிவு நீர் பண்ணை அமைக்கப்படும் என்றும் மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைமேயர் லீலாவதி உண்ணி, கமிஷனர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 13 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:–

25 டன் இறைச்சிக்கழிவுகள்

கோவை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 850 டன் அளவுக்கு குப்பைகள் சேருகிறது. இதில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் இறைச்சி கழிவுகள் தரம்பிரிக்கப்படாத நிலையில் திடக்கழிவுகளுடன் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த கழிவுகளை தனியாக பிரித்து சேகரித்து, ஒரு இடத்தில் குவித்து, மாசு கட்டுப்பாடு வாரிய நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் கழிவுகளை அழிக்க மாநகராட்சி ஒப்புதல் கோரப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. கோழிகழிவுகள், இறைச்சி கழிவுகளை கடைகள் தோறும் சென்று சேகரிக்கவும், அந்தந்த பகுதியில் கடை ஊழியர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காத இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.

கோவையில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த ரூ.16 லட்சம் செலவில் கூடுதலாக 2 வாகனங்கள் வாங்கி, தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானமும் நிறைவேறியது.

ஒண்டிபுதூர் கழிவுநீர் பண்ணை


ஒண்டிப்புதூர் கழிவு நீர் பண்ணை திட்டத்துக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மேயர் செ.ம.வேலுசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:–

கோவையில் பாதாளசாக்கடை திட்டத்தில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிக்க ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.67 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தால்தான் சாக்கடை நீர் தேங்காமலும, கொசு உற்பத்தியாகாமலும் தடுக்க முடியும். எனவே இந்த திட்டத்துக்கான தொடக்கவிழா விரைவில நடைபெறும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒண்டிப்புதூர் சிந்துநகர் பகுதியில் அமைக்க கூடாது என்று என்னிடமோ, மாநகராட்சி கமிஷனரிடமோ இதுவரை யாரும் மனு அளிக்கவில்லை. திடீரென்று எதிர்ப்பு தெரிவிப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.