Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைகளை அகற்ற கட்டணம்:நத்தம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF
தினமணி               24.05.2013

குப்பைகளை அகற்ற கட்டணம்:நத்தம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்


நத்தம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 நத்தம் பேரூராட்சியின் கூட்டம், அதன் தலைவர் விஜயலட்சுமி தனபால் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து தலைவர் விஜயலட்சுமி தனபால் பேசியது:

 நகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், நாள்தோறும் சுற்றப்புறப் பகுதியிலிருந்து வந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால், பஸ் நிலையம், சாலையோரக் கடை, காய்கறிக் கடை, பூக்கடை, பழக்கடை ஆகியவற்றின் மூலம் அதிமான குப்பைகள் சேர்ந்து வருகின்றன. அவற்றை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் மிகுந்த சிரமப்பட்டு வருகிறது.  

 நகரைச் சுத்தமாக வைக்கும் வகையிலும், பேரூராட்சி வருவாயைப் பெருக்கவும் குப்பைகளை அகற்றுவதற்கு கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.       அதன்படி, திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் குப்பைகளை அகற்றுவதற்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ. 1500, வழிபாட்டுத் தலங்களில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ. 250, உணவு விடுதிகளுக்கு மாதம் ஒருமுறை ரூ. 2000 என கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், தள்ளுவண்டிகள், இறைச்சிக் கடைகள், இரவு நேரக் கடைகள் ஆகியவற்றுக்கும் மாதத்துக்கு ரூ. 1500 கட்டணமாக வசூலிக்கப்படும். வியாபாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு உரிய கட்டணங்களை செலுத்தினால், பேரூராட்சி வாகனம் மூலம் குப்பைகள் அகற்றப்படும் என்றார்.