Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடி நகராட்சி குடிநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு

Print PDF
தினமணி       26.05.2013

போடி நகராட்சி குடிநீர் பிரச்னை: அமைச்சர் ஆய்வு


போடியில் குடிநீர் பிரச்னை குறித்து, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

போடி நகராட்சியில் 33 வார்டுகளில் 80 ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர்.  போடி நகராட்சிக்கு கொட்டகுடி ஆற்றின் உற்பத்தி இடமான சாம்பலாற்றிலிருந்து தடுப்பணை கட்டப்பட்டு, அங்கிருந்து ராட்சதக் குழாய்கள் மூலம், போடி பரமசிவன் கோயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து நன்றாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கொட்டகுடி ஆறு உற்பத்தியாகும் பகுதிகளில் ஏராளமான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதால், இப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மழை பொய்த்துவிட்டது.

இதனால் கொட்டகுடி ஆறு வறண்டு விட்டது. இதில் சாம்பலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கும் தண்ணீரையே குடிநீருக்கு பயன்படுத்த கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் சில நேரங்களில் கலங்கலாக விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 140 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டநிலை மாறி தற்போது 90 லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் அதிருப்தியடைந்த நிலையில், தமிழக நிதியமைச்சரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, சனிக்கிழமை போடி நகராட்சி அலுவலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், கொட்டகுடி ஆறு உற்பத்தியாகும் பகுதிக்கும்  சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அப்பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்தார். மேலும் தற்போது தினமும் சேமிக்கப்படும் நீரின் அளவு, சுத்திகரிக்கப்படும் நீரின் அளவு, விநியோகம் செய்யும் அளவு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.