Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விரைவில் தொடக்கம்:அமைச்சர் கே.பி.முனுசாமி

Print PDF
தினமணி       26.05.2013

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விரைவில் தொடக்கம்:அமைச்சர் கே.பி.முனுசாமி


ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தமிழக முதல்வரால் தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைசச்ர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் கூட்டரங்கில் சனிக்கிழமை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பயனாபாட்டிற்காக தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் அளிப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பொ) முதன்மை செயலர் சி.வி.சங்கர் பங்கேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கதே.பி.முனுசாமி பேசியது: தமிழக முதல்வருக்கு  மாவட்ட மக்கள் சார்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக முதல்வர் 2-ஆவது முறையாக ஆட்சிபொறுப்பேற்றப்பிறகு ஒன்றுபட்ட மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தில் இருந்த போது புளோரைடு கலந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தி வருவதை தவிர்க்கும் பொருட்டு காவிரி குடிநீரை கொண்டு வருகிற திட்டம் ஒன்றை தீட்டினார். அதனடிப்படையில் தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்று 24 மாத காலத்திற்குள்ளாகவே முழுமையாக நிறைவேற்றும் பொருட்டு வேகமாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினால் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவதோடு புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் மாற்று குடிநீரை மக்கள் பயன்பெற காவிரி குடிநீர ஆதாரத்தில் இருந்து  குடிநீர் கொடுத்துள்ளார். இத்திட்டம் நிறைவேற நிறைய இடர்பாடுகளை எதிர்த்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் இந்திய துணை கண்டத்திலேயே சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும். இத்திட்டத்தின் கீழ் 9936 கி.மீ நீளம் குழாய்கள் பதிக்கப்பட்டு 1500 மி.மீ அளவு மற்றும் 63 மில்லி லிட்டர் அளவுள்ள குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதில் 16 கோடி லிட்டர் குடிநீர் சுமந்து செல்லும் குழாயை பதிக்கும் பணி வல்லுநர்களால் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கடல் மட்டத்தில் இருந்து குடிநீர் 300 மீட்டர் உயரத்தில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அவற்றில் ஒசூர் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 1125 மீட்டர் உயரத்தில் உள்ளவற்றுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட  உள்ளது. ஒசூர் பகுதிக்கு குடிநீர் கொண்டுவர 5 இடங்களில் நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வரின் கரங்களால் விரைவில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது என்றார் அமைச்சர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்.சி.பிரகாசம், சார்-ஆட்சியர் பிரவின் பீ.நாயர்,  நிர்வாகப் பொறியாளர்கள் சங்கரநாராயணன், ரபிக், மேற்பார்வை பொறியாளர் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.