Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் தபால் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் விநியோகம்

Print PDF
தினமணி       26.05.2013

மாநகராட்சியில் தபால் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் விநியோகம்


சேலம் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு விண்ணப்பித்த அடுத்தநாளே தபால் மூலம் சான்றிதழ்கள் கிடைக்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சியியால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் குறித்து தலைமைச் செயலகம், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள், காவல்துறை அலுவலகங்கள், தொழிலார் நலத்துறை அலுவலகங்கள், கட்டுமான சங்கங்கள்,  பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் இருந்து சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்து தரக் கோரி அலுவலகக் கடிதங்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.

அவ்வாறு பெறப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை, அலுவலக பதிவேடுகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது சில பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சமூக விரோதிகளால்  போலியான முறையில் தயார் செய்யப்பட்டு அரசு, மாநகராட்சி முத்திரைகள் இடப்பட்டு வழங்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அன்னியர்கள் அத்து மீறி நுழைந்து பொதுமக்களை திசைத்திருப்பி தவறான தகவல்களை வழங்குவதை தடுக்க சம்மந்தம் இல்லாத நபர்கள் வளாகத்தினுள் நுழைவது தடை செய்யப்பட்டது.

மேலும், இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. தினமும் அன்னியர்கள் எவரேனும் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றனரா என கண்காணிக்க தனிப்பட்ட முறையில் மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சேலம் மாநகராட்சி வளாகத்திற்குள் நான்கு இடங்களில்  மாநகராட்சி அலுவலர்களை மட்டும் அணுகுமாறு விழிப்புணர்வு  பலகைகளும், செலுத்த வேண்டிய கட்டணம், இணைக்க வேண்டிய ஆவணங்களின் விபரம் குறித்து தெளிவாக பலகை வைக்கப்பட்டுள்ளன.

எனினும், அன்னியர்களால் விநியோகிக்கப்படும் போலி சான்றிதழ்களால் பொதுமக்கள் ஏமாந்து வருகின்றனர்.

இதனால், சேலம் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு மற்றும் இதர தகவல்களைப் பெற வருபவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை மட்டும் அணுகி சந்தேகங்களைக் கேட்கவும், வெளி நபர்கள் யாரையும் அணுக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பள்ளி, கல்லூரி சேர்க்கை நேரம் என்பதால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவாக சான்றிதழ்கள் வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விண்ணப்பித்த மறுநாளே தபால் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு  சான்றிதழ் அனுப்பப்படும். இதற்காக கூடுதல் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.