Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலத்தில் தொடங்கவுள்ள அரசின் மலிவு விலை உணவகங்களில் மேயர் ஆய்வு

Print PDF
தினமணி         30.05.2013

சேலத்தில் தொடங்கவுள்ள அரசின் மலிவு விலை உணவகங்களில் மேயர் ஆய்வு


சேலம் மாநகராட்சியில் தொடங்கவுள்ள அரசின் மலிவு விலை உணவகங்களில் மேயர் எஸ்.சௌண்டப்பன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகராட்சியில் வெங்கடப்பசாலை மாநகராட்சி கட்டடம், சத்திரம் மேம்பாலம் அருகில், சூரமங்கலம் காவல் நிலையம் அருகில், பழைய சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம், குமாரசாமிபட்டி அரசு கலைக்கல்லூரி அருகில், முதல் அக்ரஹாரம் காய்கறி சந்தைப் பகுதி, அம்மாப்பேட்டை ஜோதி திரையரங்கு அருகில், கொண்டலாம்பட்டி, மணியனூர் ஆகிய 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படுகிறது.

இந்த உணவகங்களுக்கு ரூ.3.70 லட்சத்தில் 56 வகையான சமையல் பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள், நீராவி முறையில் இட்லி தயார் செய்யும் பாத்திரம் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும், ரூ.70 ஆயிரத்தில் ஒவ்வொரு உணவகங்களிலும் சூரிய ஒளி மின் சக்தி கலங்கள் அமைப்பதற்கான கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

தற்போது, அனைத்து இடங்களிலும் உணவகம் செயல்பாட்டிற்கு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள கருங்கல்பட்டி, மணியனூர், சூரமங்கலம் மண்டலத்தில் பழைய சூரமங்கலம் சந்தைப்பேட்டை அருகில், சூரமங்கலம் காவல் நிலையம் அருகில், அம்மாபேட்டை மண்டலத்தில் உள்ள வாசவி மஹால் அருகில் உள்ள உணவகம் ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணியினை மகளிர் சுய உதவிக் குழுவினர் மேற்கொண்டனர். இந்தப் பணிகளை சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சௌண்டப்பன், ஆணையர் மா.அசோகன், துணைமேயர் மு.நடேசன் ஆகியோர் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு, சோதனை அடிப்படையில் தயார் செய்யப்பட்ட சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை சாப்பிட்டனர். அப்போது, உணவங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என மேயர் தெரிவித்தார்.

மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஜி.காமராஜ், அ.அசோகன், மாநகர நல அலுவலர் மருத்துவர் வி.மலர்விழி, மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.