Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாமக்கல்லில் 12 ஆட்டிறைச்சி கடைகளுக்கு ரூ.7750 அபராதம்

Print PDF
தினமணி        03.06.2013

நாமக்கல்லில் 12 ஆட்டிறைச்சி கடைகளுக்கு ரூ.7750 அபராதம்


நாமக்கல்லில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் நகராட்சி அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 12 கடைகளுக்கு  7,750 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் திறந்த வெளியில் ஆடுகளை வெட்டுவதால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் உழவர் சந்தை அருகே ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு கட்டண அடிப்படையில் ஆடுகளை மருத்துவப் பரிசோதனை செய்து சுகாதாரமான முறையில் வெட்டி முத்திரையிட்டு அளிக்கப்படுகிறது. நகரில் இறைச்சிக் கடை நடத்துவோர் ஆடுகளை இந்த ஆடுவதைக் கூடத்துக்குக் கொண்டு வந்து மருத்துவப் பரிசோதனை செய்து வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும் என நகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும்,  விதிமுறைகளைப் பின்பற்றாமல் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் வழக்கம்போல, திறந்த வெளியிலேயே ஆடுகளை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் சண்முகவேல், சின்னதுரை, உதயகுமார் உள்ளிட்ட குழுவினர் நகராட்சிப் பகுதியிலுள்ள சுமார் 57 இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சேந்தமங்கலம் சாலை, கோட்டை சாலை, ஏஎஸ் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 12 கடைகளில் நகராட்சி ஆடுவதைக் கூட முத்திரை இல்லாத இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டுபிடித்த அலுவலர்கள் அந்தக் கடைகளுக்கு 7,750 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அந்தப் பகுதி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 12 கிலோ பழைய இறைச்சியையும் அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தொடர்ந்து இதேபோல் ஆடுவதைக் கூடத்துக்கு ஆடுகளை கொண்டு வராமல் தாங்களாகவே ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.