Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாமக்கல்லில் புதை சாக்கடைப் பணிகள் செயல் விளக்கம்

Print PDF
தினமணி       05.06.2013

நாமக்கல்லில் புதை சாக்கடைப் பணிகள் செயல் விளக்கம்


நாமக்கல் நகராட்சியில் புதை சாக்கடைப் பணிகளுக்காக   வாங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, தொழிலாளர்கள் எவ்வாறு  அடைப்புகளை சரிசெய்கின்றனர் என்பது குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

உலக வங்கி நிதியுதவியுடன் நாமக்கல் நகராட்சியின் பழைய 23 வார்டுகளில் ரூ.22.34 கோடி மதிப்பில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் வீடுகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என இதுவரை சுமார் 4,300 இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கான இணைப்புக் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தவிர, புதை சாக்கடை கழிவுநீர் சேந்தமங்கலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதை சாக்கடை திட்டத்தை கடந்த மே மாதம் 9ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்காக ரூ. ஒரு  லட்சம் செலவில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜனுடன் கூடிய முகமூடி, பிரத்யேக கை உறை மற்றும் காலணி, உடை உள்ளிட்ட இந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு புதை சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரிசெய்வது குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், ஆணையர் (பொறுப்பு) கமலநாதன் ஆகியோரது முன்னிலையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு புதை சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரிசெய்து காட்டினர்.

பிறகு, இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் கரிகாலன் கூறியது:

அரசு உத்தரவுப்படி புதை சாக்கடைக்குள் இறங்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியது கட்டாயமாகும். அதற்காக ரூ. ஒரு லட்சம் மதிப்பில் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நகரில் புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும் என்றார் அவர்.