Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமீறி கட்டிய கட்டிட பகுதிகள் இடிக்க நடவடிக்கை மேலூரில் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி

Print PDF
தினத்தந்தி               05.06.2013

விதிமீறி கட்டிய கட்டிட பகுதிகள் இடிக்க நடவடிக்கை மேலூரில் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பேட்டி


மேலூரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை திடீர் ஆய்வு செய்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

குறைகேட்கும் முகாம்

மேலூர் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டார். அவரிடம் 234 பேர் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதன்பின் அவர் மேலூரில் செக்கடி பஜாரிலிருந்து சந்தைப்பேட்டை பகுதிகளில் நடந்தே சென்று அங்கு கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை திடீர் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மேலூரில் நகராட்சியில் அனுமதி பெற்றவர்கள் 750 அடியில் கட்டிடம் கட்ட அனுமதி பெற்று விட்டு கூடுதல் இடத்தில் கட்டியுள்ளனர். மற்றொரு இடத்தில் அனுமதி பெறப்பட்ட 1, 020 அடிக்கும் கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு இடத்தில் விதிகளை மீறி 3–வது மாடி கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அனுமதிக்காத இடங்களில் கட்டப்பட்ட பகுதியை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலூர் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றிய பாஸ்கரசேதுபதி வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அதிக புகார்கள் உள்ளன.

காவிரி குடிநீர் திட்டம்

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவுபெறும். மேலூர் அரசு கலைக்கல்லூரியில் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலூர் போலீஸ் நிலைய எல்லை அதிக அளவில் இருப்பதால் இந்த போலீஸ் நிலையம் நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம் என பிரிக்க பரிந்துரை செய்யப்படும்.

மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக தோண்டி எடுக்கப்பட்ட அளவுகளை அளவீடு செய்து அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் வசூலிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு உள்ளது. இது தொடர்பாக 88 குவாரிகளுக்கு விளக்க நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீதம் உள்ள 27 குவாரிகளில் நீர் நிரம்பியிருப்பதால் தண்ணீர் வற்றிய பின்னர் அளவீடு செய்யும் பணி நடைபெறும்.

அரசு புறம்போக்கு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை விரைவில் உலகளாவிய டெண்டர் மூலம் ஏலம் விடப்படும். 70 சதவீத நடவடிக்கைகள் விசாரணையில் உள்ளதால் விசாரணை நடவடிக்கைக்கு பின்பு கோர்ட் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குறைதீர்க்கும் முகாமில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெயசிங்ஞானதுரை, நகராட்சியின் இணை இயக்குனர் குபேந்திரன், தாசில்தார் வசந்தா ஜூலியட், நகராட்சி ஆணையாளர் சுல்தான் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.