Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பரமத்திவேலூர் பேருந்து நிலையக் கடைகள் ஏலம்

Print PDF
தினமணி        06.06.2013

பரமத்திவேலூர் பேருந்து நிலையக் கடைகள் ஏலம்


பரமத்திவேலூரில் புதிய பேருந்து நிலையக் கடைகள் புதன்கிழமை  ஏலம் விடப்பட்டன. இதில் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 700 வரை  ஏலம் போனது.

பரமத்திவேலூர் பழைய பேருந்து நிலையம் மிகவும் சிதலமடைந்து  இடிந்து விழும் நிலையில் இருந்ததால், பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கின. 2009-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பணிகள் 2012-ஆம் ஆண்டு நிறைவு பெற்றன.

ரூ. ஒரு  கோடியே 87 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் 30 கடைகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டப்பட்டது.  30 கடைகளில் 14 கடைகளை பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 16 கடைகளில் 7 மற்றும் 11-ஆம் எண் கடைகளுக்கு நீதிமன்ற வழக்கு தொடர்பாக  ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மீதமுள்ள 14 கடைகளுக்கு புதன்கிழமை காலை பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஏலம் நடைபெற்றது. பேரூராட்சியின் தலைவர் வேலுச்சாமி, செயல் அலுவலர் குருராஜன், காவல் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

இதில் அதிகபட்சமாக 30-ஆம் எண் கடை ரூ.16 ஆயிரத்து 700-க்கும் (மாத வாடகையாக), குறைந்தபட்சமாக 15-ஆம் எண் கடை ரூ. 5 ஆயிரத்து 700-க்கும் (மாத வாடகையாக) ஏலம் போனது. கழிவறை ரூ. ஒரு லட்சத்து 81 ஆயிரத்துக்கு (ஆண்டுக்கு) ஏலம் போனது.

கடைகள் மற்றும் கழிவறைகள் மூலம் பேரூராட்சிக்கு ஓர் ஆண்டு வாடகையாக ரூ.20 லட்சத்து 95 ஆயிரமும், கடைகளுக்கான வைப்புத் தொகை  மூலம் ரூ.29 லட்சமும் வருமானம் கிடைக்கும். ஏலத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.