Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் மேலும் ஒரு விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்' வைப்பு

Print PDF
தினமணி         07.06.2013

மதுரையில் மேலும் ஒரு விதிமீறல் கட்டடத்துக்கு "சீல்' வைப்பு


மதுரையில் விதிமீறி கட்டப்பட்டு வந்த 3 மாடி வணிக வளாகக் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

 மதுரை மாநகராட்சி பகுதியில் ஏராளமான விதிமீறல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில், சில கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

 இந் நிலையில், மதுரை ஸ்காட் சாலையில் அழகுநாதன் உள்பட 3 பேர் இணைந்து தரைகீழ் தளத்துடன் கூடிய 3 அடுக்குமாடி வணிக வளாகக் கட்டடம் கட்டி வந்தனர். விதிகளை மீறி இக்கட்டடம் கட்டப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபாலுக்குப் புகார்கள் கூறப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

 அப்போது, முந்தைய மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ஒருவர் இக்கட்டடத்துக்கு அதிகார வரம்பை மீறி 27,338 சதுர அடிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியிருப்பது தெரியவந்தது.  மேலும், இக்கட்டடத்துக்கு 10.1.2008 முதல் 9.1.2010 வரை கட்டுமானப் பணிக்கு வரைபடத்தில் அனுமதி பெறப்பட்டிருந்தது. கால அனுமதி முடிந்த நிலையில், இக்கட்டடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இருந்து 1 கி.மீ. வரை 9 மீ. உயரக்கட்டுப்பாட்டை மீறி, 12 மீட்டர் உயரத்துக்கு கட்டடம் கட்டப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, ஆணையர் ஆர். நந்தகோபால் முன்னிலையில், முதன்மை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் ஆ. தேவதாஸ், உதவிப் பொறியாளர் கனி, உதவி நகரமைப்பு அலுவலர் நாராயணன் மற்றும் ஊழியர்கள் இந்த கட்டடத்துக்கு வியாழக்கிழமை சீல் வைத்தனர். மேலும், கட்டட வரைபடத்தை அனுமதித்த வரைவாளர் ஒய். ஜெயசேகரின் உரிமை ஆணையை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வரைபட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.