Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகர பகுதி மக்கள் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி              14.06.2013

கோவை மாநகர பகுதி மக்கள் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்

கோவை மாநகர பகுதியில் உள்ள மக்கள் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கருத்தரங்கு

மத்திய அரசின் எரிசக்தித்துறை, கோவை மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் சூரிய ஒளி மூலம் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு கோவையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் க.லதா தலைமை தாங்கினார். மரபு சாரா எரிசக்தித்துறை துணை பொதுமேலாளர் பங்கஜ்குமார், ஆலோசகர் அஜய் சந்தக் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மேயர் செ.ம.வேலுசாமி குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சோலார் சிட்டி

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சூரியசக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்க சிறப்பான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அவர் எடுத்து வரும் நடவடிக்கையால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் பெற்று, தெருவிளக்குகள், சமையல் அடுப்பு, குளிர்சாதன கருவி, வாசிங்மெஷின், குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 60 நகரங்களில் கோவை மாநகரம் சோலார் சிட்டி என்று மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை அறிவித்து உள்ளது.

பயன்படுத்த வேண்டும்

கோவை மாநகராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த மத்திய அரசு உடனுக்குடன் மானியம் வழங்கி வருகிறது. அதுபோன்று தமிழகத்திலும் மானியத்தை உடனடியாக வழங்கினால் பலர் அதை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

கோவை மாநகர பகுதியில் உள்ள தொழில்துறையினர், தனியார் கட்டிட உரிமையாளர்கள், தனியார் கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் நமது நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி பேசினார். கருத்தரங்கில் மண்டல தலைவர் ஜெயராம், மாநகராட்சி பொறியாளர் சுகுமார், மாநகராட்சி தொழில் ஆலோசகர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.