Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சியில், அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்து மேயர் ஜெயா ஆய்வு சப்பாத்தி, பூரி வழங்க பொது மக்கள் கோரிக்கை

Print PDF

தினத்தந்தி               15.06.2013

திருச்சியில், அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்து மேயர் ஜெயா ஆய்வு சப்பாத்தி, பூரி வழங்க பொது மக்கள் கோரிக்கை

திருச்சியில் அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்து மேயர் ஜெயா ஆய்வு நடத்தினார். சப்பாத்தி, பூரி வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அம்மா உணவகங்கள்

திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ–அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். திருச்சியில் பொதுமக்களின் வரவேற்புடன் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேயர் ஜெயா ஆய்வு

இந்தநிலையில் அம்மா உணவகங்களில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க மேயர் ஜெயா நேற்று ஆய்வு செய்தார். திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ்ரோட்டில் உள்ள அம்மா உணவகம், ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள அம்மா உணவகம் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

அங்கு உணவு சாப்பிட்ட மேயர் ஜெயா, பொதுமக்களிடமும் உணவின் தரம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, கோட்ட தலைவர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பக்ருதீன், கவுன்சிலர் லாவண்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

கருத்துபதிவேடு நோட்டு

தற்போது அம்மா உணவகங்களில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய கருத்துபதிவேடு நோட்டு வைக்கப்பட்டு உள்ளது. உணவு சாப்பிட்ட பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அந்த நோட்டில் எழுதலாம். அந்த நோட்டில் கருத்துக்களை எழுதி இருந்த பலர் உணவு நன்றாக இருப்பதாக எழுதி இருந்தனர். அதேபோல் சப்பாத்தி, பூரி போன்றவைகளும் வழங்க வேண்டும் என்றும் ஒரு சிலர் எழுதி இருந்தனர்.