Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தல்

Print PDF

தினமணி               18.06.2013 

அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தல்

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், கொடைக்கானல் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

 கொடைக்கானலில் பெர்ன்ஹில் ரோடு, செண்பகனூர், அட்டைக்கடி ஆகியப் பகுதிகளில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பழமையான  ரப்பர், யூக்லிப்டஸ், பைன் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 15 லட்சமாகும். இதனால் நகராட்சி நிர்வாகத்துக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட வார்டு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொடைக்கானல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

 இது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சாகுல் ஹமீது கூறியதாவது: கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளான பெர்ன்ஹில் ரோட்டிலுள்ள பழமையான மரங்களை அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் வெட்டியுள்ளனர். மேலும் செண்பகனூர் பகுதிகளில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து கொடைக்கானல் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 வில்பட்டி பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தப்பட்டு வருகின்றன.  பகல் நேரங்களில் மரங்களை வெட்டி மலைச் சாலைகளில் குவித்து வைத்து, இரவு நேரங்களில் லாரி மூலம் கடத்தி வருகின்றனர். இவற்றைத் தவிர மங்களம் கொம்பு,

கடுகுதடி, தாண்டிக்குடி,பண்ணைக்காடு ஆகியப் பகுதிகளில் கொடைக்கானல்-மதுரை சாலையான ஊத்து வழியாக மரங்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

 ஏற்கனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டியதாலும், பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டதாலும் மழைத் தண்ணீர் பூமிக்கடியில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. எனவே மரங்களை அனுமதியில்லாமல் வெட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.    இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அந்தந்த வார்டு பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் கூறியதாவது: கடந்த சில தினங்களாக யாருக்கும் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை, தவறு செய்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.