Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் தொட்டி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேயர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி                18.06.2013 

குடிநீர் தொட்டி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேயர் எச்சரிக்கை


குடிநீர் தொட்டி வளாகத்தில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடிநீர் தொட்டி

வேலூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை செய்வதற்காக பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டிகளை கட்டி மாநகராட்சி பராமரித்து வருகிறது. அதாவது அந்த தொட்டியில் தண்ணீரை தேக்கி வைத்து வார்டு வாரியாக சப்ளை நடைபெறுகிறது.

அந்த வகையில் வேலூர் பில்டெர்பெட் ரோட்டில், சார்பனாமேடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலத்தில் 39 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தரை மட்ட நீர் தேக்க தொட்டி உள்ளது. அத்துடன் புதிதாக கட்டப்பட்ட 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இன்னொரு நீர்த்தேக்க தொட்டியும் உள்ளது.

அந்த வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இருந்தாலும், சிலர் சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து உள்ளே செல்கின்றனர். சிலர் காம்பவுண்டு சுவரில் துளை போட்டு உள்ளே செல்கின்றனர். அப்படிச்செல்லும் அவர்கள் அங்கு கூட்டம், கூட்டமாக அமர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேரில் ஆய்வு

எனவே இது மாதிரியான செயல்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் சூளை. செல்வம் மாநகராட்சி கூட்டத்தில் அடிக்கடி கோரி வந்தனர். அதற்கு மேயர், கமிஷனர் ஆகியோர் அந்த பகுதியை நேரில் பார்வையிட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தனர்.

அதன்படி நேற்று காலை மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி, துணை மேயர் தருமலிங்கம், என்ஜினீயர் தேவக்குமார், மண்டலக்குழு தலைவர் குமார், கவுன்சிலர்கள் சூளை. செல்வம், அயூப் மற்றும் அலுவர்கள் குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மேயர், கமிஷனர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இங்குள்ள சுற்றுச்சுவரை துளை போட்டு மர்ம ஆசாமிகள் பகலிலும், இரவிலும் உள்ளே வந்து சமுக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த துளையை அடைத்தால், அந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் சுவரை உடைத்து உள்ளே சென்று விடுகிறார்கள். அவர்களை தட்டிக்கேட்கும் மாநகராட்சி ஊழியர்களை அந்த ஆசாமிகள் தாக்குகிறார்கள். எனவே மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வேலை செய்யவே அச்சப்படுகின்றனர்.

கடும் நடவடிக்கை

எனவே இனிமேல் இதுமாதிரியான செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இதே தவறு நடக்குமானால் அதுபற்றி போலீசில் புகார் செய்யப்படும். இந்த வளாகம் மட்டுமல்லாது மாநகராட்சி சொத்தை ஆக்கிரமிப்பவர்கள், சேதப்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மேயர் கூறினார்.

பின்னர் மேயர் வேலப்பாடி சோளாபுரி அம்மன் கோவில் தெரு, தாண்டவராயன் கோவில் தெரு பகுதிகளில் போடப்பட்டு வரும் சிமெண்டு, தார் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.