Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டட உரிமங்களுக்கு கூடுதல் கட்டணம்

Print PDF

தினமணி               19.06.2013

கட்டட உரிமங்களுக்கு கூடுதல் கட்டணம்

கோவை மாநகராட்சிப் பகுதியில் கட்டடம் கட்டுவதற்கான உரிமக் கட்டணங்களை உயர்த்துவதற்கு மாமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

மாநகராட்சி நகரமைப்புப் பிரிவின் சார்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதி உரிமக் கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்தக் கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் மாநகராட்சியின் வருவாய் நிலை மற்றும் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்ட நிபந்தனைப்படி உரிமக் கட்டணத்தைக் கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

குடியிருப்புகள், வணிகக் கட்டடம் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் இப்போதுள்ள உரிமக் கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உறுப்பினர்களின் கருத்துக்கேற்ப உயர்த்த உத்தேசித்துள்ள கட்டணத்தைக் குடியிருப்புகளுக்கு மட்டும் குறைத்து வசூலிக்க கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.

கட்டட அனுமதிக் காலம் 2 ஆண்டுகளுக்குப் பதிலாக 3 ஆண்டுகள் என வழங்கப்படும்.

சேவைக் குடியிருப்புகள், மேன்ஷன்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு உயர்த்த உத்தேசிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக மேயர் செ.ம.வேலுசாமி பேசியது: கோவை மாநகரைப் பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் அதிக அளவில் குடியிருப்புகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமிடங்களில் கண்டிப்பாக மரம் வளர்க்க வேண்டும். மழை நீர் சேகரிப்புத் திட்டமும் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதியளிக்கப்படும். தனி வீடுகளுக்கு உயர்த்த உத்தேசிக்கப்பட்ட உரிமக் கட்டணம் குறைத்து வசூலிக்கப்படும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

சிறப்புத் தீர்மானங்கள்: கோவை மாநகராட்சியின் மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக 424 துப்புரவுப் பணியாளர்களை நியமித்துக் கொள்வதற்கான தீர்மானத்தை வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார் கொண்டு வந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளையும் பூங்காக்களையும் மாநகராட்சியே பராமரிப்புச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை அதிமுக உறுப்பினர் வெண்தாமரை பாலு கொண்டு வந்தார். இத்தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.