Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலப்பாளையம் நவீன ஆடறுப்பு மையம்: மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு

Print PDF

தினமணி 24.09.2009

மேலப்பாளையம் நவீன ஆடறுப்பு மையம்: மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு

திருநெல்வேலி, செப். 23: மேலப்பாளையம் நவீன ஆடறுப்பு மையத்தை நடத்த மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு திருநெல்வேலி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இம் மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் கா. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முக்கியமாக மேலப்பாளையத்தில் ரூ. 55 லட்சத்தில் கட்டப்பட்டு ஓராண்டாக மூடிக்கிடக்கும் ஆடறுப்பு மையத்தைத் திறக்க அவசரக் கூட்டப் பொருளில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

ஆடறுப்பு மையத்தை நடத்தவும், பராமரிக்கவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் நீதிமன்றம் மாநகராட்சிக்கு எதிராக தடை பிறப்பிக்கவில்லை.

இதையடுத்து மாநகராட்சி மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு செய்துள்ளது. இதில் தற்போது தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள மாமன்றத்தின் அனுமதி கேட்டு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

மேலும் ஆடறுப்பு மையத்தைப் பராமரிக்க, அதை ஒப்பந்தம் எடுக்க உள்ளோர் பின்பற்ற வேண்டிய 33 விதிமுறைகள் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்கு ஆடு ஒன்றுக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் அத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மாநகர்ப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்வது, புதிய திட்டங்கள் நிறைவேற்றுவது என பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.

Last Updated on Thursday, 24 September 2009 06:11