Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் குழுக்கள்: ஆட்சியர் நடவடிக்கை

Print PDF

தினமணி               24.06.2013 

நகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் குழுக்கள்: ஆட்சியர் நடவடிக்கை

மதுரை மாநகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கு வருவாய்த் துறை, மாநகராட்சியினர் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

 பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மதுரை மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையிலும், மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

 மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளை ஒழுங்குபடுத்தும் வகையில், அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கு, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, மாநகராட்சி மண்டலம் ஒவ்வொன்றுக்கும் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

 மேலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியினை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன் இணைந்து செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 அதன்படி, ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை, 6,672 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

 இப்பணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனியார் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள கட்டடங்களில் அனுமதியற்ற சுவர் விளம்பரங்கள் உள்ளன. மேற்படி விளம்பரங்கள் அரசு அனுமதியின்றி இருப்பதுடன், நகரின் அழகை சீர்குலைப்பதாகவும் அரசின் விதிமுறைகளுக்கு மாறுபட்ட அளவிலும் உள்ளன.

எனவே, சுவர் விளம்பரங்களை அழித்து சுத்தம் செய்திட, உத்தரவிடப்பட்டுள்ளது.

 தனியார் கட்டடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை கட்டட உரிமையாளர்கள் அழித்து சுத்தமாக வைக்கவேண்டும்.

 அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் அழித்து சுத்தம் செய்யவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இப்பணி நிறைவேற்றப்படும். அதற்குரிய செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 தனியார் கட்டடங்களில் விளம்பரப் பலகை வைப்பதற்கான இரும்பு தாங்கிகள் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்ட அளவிலேயே (அதிகபட்ச அளவே 24-க்கு 12 அடி தான்) இருத்தல் வேண்டும்.

அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ள விளம்பரப் பலகை தாங்கிகளை சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சொந்த செலவிலேயே அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.