Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள்–கடைகள் இடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               24.06.2013

ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள்–கடைகள் இடிப்பு மாநகராட்சி நடவடிக்கை

வேலூர் ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் மாநகராட்சி சார்பில் இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகள், கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளி மாநகராட்சிக்கு சொந்தமாக்கி வருகிறார்கள். அதே சமயம் சிலர் மாநகராட்சி நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். அதன் காரணமாக அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகி மற்றும் அலுவலர்கள் ஆற்காடு சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வுக்கு சென்றனர். அப்போது ஆற்காடுசாலை, நாற்கர சாலையின் கீழே கோர்ட்டுக்கு செல்லும் கீழ் பாலத்தின் அருகே கால்வாய் மற்றும் பகுதியை அக்கிரமித்து வீடுகள், கடைகள், ‘பங்க்’ கடைகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் ஆக்கிரமிப்பின் காரணமாக அந்த கால்வாயில் கழிவு நீர் செல்வது தடைபட்டு இருப்பதும், அதனால் கால்வாயை சீரமைப்பு செய்ய முடியவில்லை என்பதும், தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை உடனே காலிசெய்யும்படி கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இடித்து தள்ளப்பட்டது

இந்தநிலையில், நகரமைப்பு அலுவலர் கண்ணன் மேற்பார்வையில் கட்டிட ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் அலுவலர்கள் இயந்திரத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

பின்னர் அங்கிருந்த வீடுகள், கடைகள் இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய ஆக்கிரமிப்பை அகற்றும் பணி பகல் 2 மணிவரை நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து மாநகராட்சி கட்டிட ஆய்வாளர் மதிவாணன் கூறியதாவது:–

ஆற்காடு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள், 1 கோழிக்கறி விற்பனை செய்யும் கடை, 2 மாட்டுக்கறி விற்பனை செய்யும் கடை, மூங்கிலினால் செய்த ஏணி மற்றும் மூங்கில் பொருட்கள் விற்பனை செய்யும் கடை, மீன்விற்பனை செய்யும் கடை ஆகியவைகள் அகற்றப்பட்டன.

மேற்கண்டவைகள் மாநகராட்சி திடீரென்று அகற்ற வில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம் சுமார் 1 மாதகாலத்திற்கு முன்பே ஆக்கிரமிப்பை ஆகற்றும் படி கூறினோம். ஆனால் அவர்கள் அகற்றவில்லை எனவே தான் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடந்து நடைபெறும்

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு எங்கு இருந்தாலும் அவைகள் நிச்சயமாக அகற்றப்படும். யாருக்கும் சலுகைகள் வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு மதிவாணன் கூறினார்.