Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீதிகளில் மாடுகள் திரிவதைத் தடுக்க போதிய நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி பதில்

Print PDF

தினமணி         25.06.2013

வீதிகளில் மாடுகள் திரிவதைத் தடுக்க போதிய நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி பதில்

சென்னை மாநகர வீதிகளில் மாடுகள் திரிவதைத் தடுத்திட போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த கே.சந்திரசேகரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய எனது மனைவியை தெருவில் திரிந்து கொண்டிருந்த ஒரு மாடு முட்டிவிட்டது.

இதனால் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் நான் புகார் அளித்தேன். இதனையடுத்து அந்தப் பகுதியில் தெருவில் திரிந்து கொண்டிருந்த மாடுகள் அங்கிருந்து பிடித்துச் செல்லப்பட்டன. எனினும், சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் தெருக்களில் மாடுகள் திரியத் தொடங்கின.

இதனால் வீதிகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மட்டுமன்றி, இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் ஏராளமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆகவே, வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்துச் சென்று அடைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2012-ஆம் ஆண்டில் மட்டும் தெருக்களில் சுற்றித் திரிந்த 19 ஆயிரத்து 131 நாய்களையும், 594 பன்றிகளையும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் 8 நாய் பிடிக்கும் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தெருக்களில் திரியும் நாய் மற்றும் பன்றிகளின் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் தெருவில் திரியும் மாடுகளும் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. 2010-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை சென்னை மாநகரில் மொத்தம் 2 ஆயிரத்து 851 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.42 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தத்தில் தெருக்களில் திரியும் மாடுகள், நாய்கள் மற்றும் பன்றிகளைக் கட்டுப்படுத்திட சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்ட இந்த விவரங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சென்னை மாநகர வீதிகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து போதிய நடவடிக்கைகளை எடுத்திடும் என்று நம்புவதாகக் கூறி மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.