Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் உறிஞ்சும் மோட்டார்களை நாளைக்குள் அகற்ற உத்தரவு

Print PDF

தினமணி         25.06.2013

குடிநீர் உறிஞ்சும் மோட்டார்களை நாளைக்குள் அகற்ற உத்தரவு

காஞ்சிபுரம் பகுதியில், சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பயன்படுத்துவோர், அவற்றை புதன்கிழமைக்குள் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 காஞ்சிபுரத்தில், குடிநீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பொதுமக்கள், கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சியின் மேடான பகுதிகளுக்கு போதிய அழுத்தம் இல்லாததால், குடிநீர் விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு பெரும்பாலான வீடுகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதே முக்கிய காரணம். எனவே மின் மோட்டாரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மின் மோட்டாரை அகற்றுவது குறித்து நகராட்சி ஆணையர் விமலா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இது சட்டவிரோதச் செயலாகும். அவ்வாறு மின் மோட்டார் பயன்படுத்துவோர் தங்களது வீட்டில் உள்ள இணைப்புகளில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை வரும் புதன்கிழமைக்குள் (ஜூன் 26) அகற்றிவிட வேண்டும்.

 இதைத் தொடர்ந்து நகராட்சி மூலம் அனைத்து வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும். அப்போது மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் இணைப்புகளில் நேரடியாக குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். இது தவிர குடிநீர் இணைப்பும் எவ்வித முன் அறிவிப்புமின்றி உடனடியாகத் துண்டிக்கப்படும். மேலும் நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் குடிநீர் உப விதிகளின்படி சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.