Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருக்களில் திரியும் மாடு, நாய், பன்றிகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினமலர்               25.06.2013

தெருக்களில் திரியும் மாடு, நாய், பன்றிகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

 சென்னை:"தெருக்களில் திரியும், கால்நடைகள், நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது' என, சென்னை ஐகோர்ட்டில், மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

மிகுந்த பாதிப்பு

சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த, கே.சந்திரசேகரன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், "தெருக்களில், கால்நடைகளை, நாய்கள், பன்றிகளை திரிய விடுகின்றனர். இவற்றால், பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கின்றன. எனவே, உரிமம் பெறாமல், சாலைகளில், கால்நடைகளை திரிய விடும், உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆதி.குமரகுரு, மாநகராட்சி சார்பில், வழக்கறிஞர் அருண்மொழி ஆஜராகினர். மாநகராட்சி தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: தெருக்களில் திரியும், கால்நடைகள், நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளையும், மாநகராட்சி எடுக்கிறது. நாய்களை பிடித்து, அரசு சாரா அமைப்புகளிடம் ஒப்படைக்கிறோம்.
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து, 2,500 பிராணிகளை பிடித்து, "ப்ளூ கிராஸ்' அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.மாடுகளை, தெருக்களில் திரிய விட்டால், அவற்றை பிடித்து,மாநகராட்சிக்கான இடத்தில், அடைத்து வைக்கிறோம். பின், உரிமையாளர்
களிடம் அபராதம் மற்றும் பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்கிறோம்.

கருணை கொலை

கடந்த, மூன்று ஆண்டுகளில், 59 ஆயிரத்துக்கும் மேல், நாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில், 4,406, நாய்கள், கருணை கொலை செய்யப்பட்டன. மற்ற நாய்களுக்கு,இனப்பெருக்க கட்டுப்பாடு செய்யப்பட்டது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பதில் மனுவில் கூறியிருப்பதை, "டிவிஷன் பெஞ்ச்' பதிவு செய்து, மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டு, மனுவை, பைசல் செய்தது.